பெலாரூஸ் – போலந்து எல்லைக்குள் ஆபகான் அகதிப் பெண்ணொருவர் உணவு, நீரின்றி இறக்கும் நிலையில்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ், அகதிகளைக் கொண்டுவந்து தனது லித்தவேனியா, போலந்து நாட்டு எல்லைகளூடாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விடுவதாக சமீப மாதங்களில் குற்றஞ்சாட்டுப்பட்டு வருகிறது. அந்த அரசியல் மோதலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையுடன் வந்து ஏமாந்துபோன அகதிகள் பலர். தனது நாட்டுக்குள் அவ்வெல்லைக்கூடாக அகதிகளை நுழைய விட மறுத்து வருகிறது போலந்து.
போலந்தின் அந்த நிலைப்பாட்டால் இரண்டு நாடுகளுகளுக்குமிடையே 32 அகதிகள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்பொன்றின் விபரங்கள் மூலமாக வெளியாகியிருக்கின்றன. ஐம்பத்து இரண்டு வயதான பெண்ணொருவர் தனது ஐந்து பிள்ளைகளின் கண்களுக்கு முன்னால் இறந்துகொண்டிருப்பதாக Salvation Foundation அமைப்பு டுவீட்டியிருக்கிறது.
குறிப்பிட்ட அகதிகள் தனது நாட்டு எல்லைக்குள்ளில்லை என்கிறது போலந்து. அவர்கள் பெலாரூஸ் நிலப்பரப்பிலிருப்பதாகப் போலந்து குறிப்பிட பெலாரூஸோ அந்த அகதிகளை மீண்டும் உள்ளே வர அனுமதிக்க மறுத்து வருகிறது. இரண்டு வாரங்களாக அப்பிராந்தியத்துக்குள் மாட்டிக்கொண்ட அவர்களுக்கு உணவோ, நீர் வசதியோ கூட இல்லையென்று குறிப்பிடப்படுகிறது.
பெரும்பானான அந்த அகதிகள் பெண்கள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அதே இடத்தில் மனிதாபிமான உதவிகள் செய்யத் தயாரென்று தாம் அறிவித்தாலும் அதை அனுமதிக்க பெலாரூஸ் மறுத்துவருவதாகப் போலந்து குறிப்பிடுகிறது.
25 பேர் சுகவீனமுற்று இருப்பதாகவும் அவர்களில் 12 பேர் கடும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. ஐரோப்பாவின் மனித உரிமைகள் நீதிமன்றம் அந்த அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை எல்லையிலேயே செய்யும்படி போலந்தை இன்று கோரியிருக்கிறது.
அகதிகளாக வருபவர்களைத் துரத்தாமல், அவர்களின் நிலைமையை விண்ணப்பங்களுக்கேற்றபடி பரிசீலிக்கவேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய விதியை மீறி உள்ளே விடாமலிருக்கும் “Push back” நடப்பு ஒன்றியக் கோட்பாடுகளுக்கு எதிரானது. ஆயினும், நடந்து வருவது பெலாரூஸின் ஒரு மிரட்டல் முயற்சி என்று சொல்லி தற்காலிகமாக அவ்வழியால் எவரையும் உள்ளே விட மறுத்துச் சட்டமியற்றியிருக்கிறது போலந்து.
இவ்வாரத்தில் அந்த எல்லையில் உயரமான மதில்களை\வேலிகளைக் கட்டி முழு நேரமும் எல்லைக்காவல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்