சரித்திரத்தைப் பிழையாக விபரித்த புத்தினை மாணவனொருவன் சுட்டிக் காட்டித் திருத்தினான்.
பாடசாலைத் தவணைகள் ஆரம்பிப்பதை ஒட்டி நாட்டின் திறமையான மாணவர்களை ஆங்காங்கே சந்தித்து வரும் ஜனாதிபதி புத்தின் விளாவிடோஸ்டொக் நகரில் மாணவர் குழுவொன்றின் முன்னால் சரித்திர சம்பவங்களைக் குறிப்பிட்டார். இரண்டு வெவ்வேறு போர்களை கலந்து தவறாகச் சொன்ன புத்தினை அங்கிருந்த வாலிப மாணவனொருவன் திருத்தியது ரஷ்ய ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
“முதலாவது பீற்றர் “ஏழுவருடப் போரில்” எப்படியான வீரத்துடன் போரிட்டார் என்று சிந்தியுங்கள்! ஏழு வருடங்களாக சுவீடன் நாட்டுடன் கடும் போரில் ஈடுபட்டுப் போல்ட்டோவாவில் வெற்றி பெற்றார் முதலாவது பீற்றர். சுவீடன், போல்ட்டோவா ஆகியவற்றை நினைவுகூருங்கள்…..” என்று குறிப்பிட்டார் புத்தின்.
அங்கிருந்த மாணவர்கள் எல்லோருமே பல கல்விப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் முதல் தர மாணவர்கள். எவருமே பேசவில்லை நிக்கொனொர் தொல்ஸ்டிச் [Nikonor Tolstych] என்பவனைத் தவிர.
“அதற்குப் பெயர் “ஏழுவருடப் போர்” அல்ல, நீண்ட நோர்டிக் போர், அது 21 வருடங்கள் தொடர்ந்து நடந்தது. அத்துடன் அதில் சார் பீற்றர் நான்கு தடவைகள் சுவீடனுடன் தோல்வியுற்றார் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அதன் பின்னர் தான் அவருக்குப் போல்டோவாவில் வெற்றி கிடைத்தது,” என்று புத்தினைத் திருத்தினால் தொல்ஸ்டிச்.
விளாவிடோஸ்டொக் நகரிலிருக்கு வொர்க்கூத்தா என்ற புற நகரில் நடந்த இது ரஷ்யாவெங்கும் பிரபலமாகிவிட்டதுடன் அந்தப் பையனுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் மக்கள் பயத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதிக்கு மூக்குடைப்பது போலப் பதிலளித்தது சரியா, தவறா என்பது பற்றிச் சமூகவலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
தொல்ஸ்டிச் படிக்கும் வொர்க்கூத்தா கல்லூரி அதிபர் அவன் ஜனாதிபதியைப் பகிரங்கமாக மூக்குடைத்திருக்கலாகாது என்று அபிப்பிராயப்படுகிறார். அவனது சரித்திர ஆசிரியர் அவனது அறிவு பற்றிப் பெருமைப்பட்டாலும் தன்னால் அத்தனை துணிவாக புத்தின் முன்னால் பேசியிருக்க முடியாதென்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்