நச்சுக்கலந்த காற்றைச் சுவாசிப்பதால் வருடாவருடம் 4 – 7 மில்லியன் பேர் குறைந்த ஆயுளில் இறந்துவிடுகிறார்கள்.
எம்மைச் சுற்றியிருக்கும் காற்று பற்றிய ஆராய்ச்சி அறிக்கை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஐ.நா-வின் சூழல் அமைப்பினால் (UNEP) வெளியிடப்படுகிறது. புதிய அறிக்கையின்படி உலகில் வாழ்பவர்களில் பாதிப்பேர் மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள். வருடாவருடம் அப்பாதிப்பினால் 4 – 7 மில்லியன் பேரின் ஆயுள் குறைக்கப்படுகிறது. எந்த ஒரு காரணத்தாலும் உலகில் இத்தனை பேரின் ஆயுள்கள் குறைக்கப்படுவதில்லை என்கிறது அந்த அறிக்கை.
நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், திடீர் மாரடைப்பு ஆகியவை மாசுபட்ட காற்றினால் ஏற்படக்கூடிய சில விளைவுகளாகும்.
வாகனங்களின் நச்சுக்காற்று குறைத்தல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் நச்சுக்காற்றின் அளவு குறைத்தல், குப்பைகளைக் கையாளுதல் போன்றவைகள் மூலம் தத்தம் நாடுகளின் சூழலை மேம்படுத்துவதாக 124 நாடுகள் சில வருடங்களின் முன்னர் ஒரு உறுதிமொழிப் பட்டயத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. எம்மைச் சுற்றியிருக்கும் காற்றிலிருக்கும் மாசு எல்லை எது என்பது பற்றி அதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு வரையறுத்திருக்கிறது. அதை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றியும் குறிப்பிட்ட நாடுகள் வழிமுறைகளை உண்டாக்கிருக்கின்றன.
ஆனால், தமது நாட்டின் காற்று மாசுபடுவதைக் குறைப்பது பற்றிய உறுதிமொழிப் பட்டயத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் 57 நாடுகளே அவைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 104 நாடுகளில் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கும் திணைக்களங்களே அமைக்கப்படவில்லை. அவற்றை அளப்பதற்கான கருவிகளும் அவர்களில் பெரும்பாலானோரிடம் இல்லை.
வளர்ந்துவரும் நாடுகளில் வாழ்க்கை வசதிகள் மேம்படுத்தப்படும் அதே சமயம் அதன் விளைவாக சுவாசிக்கும் காற்று மாசுபடுகிறது. அதற்குக் காரணம் அவர்களின் தேவைக்காகப் எரிக்கப்படும் புதைபடிவ எரிபொருட்களின் அளவு அதிகமாகின்றன என்பதாகும்.
காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்த நாம் செய்யவேண்டிய அதே நடவடிக்கைகளைச் செய்தால் உலக மக்களில் பெரும்பாலானோரின் ஆயுள்காலத்தைக் குறைக்கும், அவர்களை சுகவீனமாக்கும் மாசுபட்ட சூழலையும் சுத்தமாக்கலாம் என்று ஐ.ந-வின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்