கொவிட் 19 பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
சர்வதேச சஞ்சிகையொன்று [Sage’s International Federation of Library Associations and Institutions journal.] கொவிட் 19 சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட 138 நாடுகளின் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய விபரங்களை ஆராய்ந்திருக்கிறது. அதைக் கவனித்ததில் தவறான விபரங்களை சமூகவலைத்தளங்களில் அதிகளவு வெளியிட்டிருக்கும் நாடு இந்தியாவே என்கிறது.
நாட்டில் இணையத்தளப் பாவிப்பும், சமூகவலைத் தளப் பாவிப்புக்களும் அதிகரித்திருத்தல், பாவிப்பவர்களிடம் இணையத்தளம் பற்றிய அறிவு மோசமாக இருப்பதுமே இந்த நிலைமைக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
குறிப்பிட்ட சஞ்சிகை 138 உலக நாடுகளின் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய 9,657 தவறான விபரங்களைத் தேர்ந்தெடுத்தது. அவைகள் 94 வெவ்வேறு அமைப்புக்களால் “எங்கிருந்து வந்தன, பின்னணி, ஏன்” போன்ற கேள்விகளால் ஆராயப்பட்டன. அவைகளில் 15.94% இந்தியாவிலிருந்தும், 9,74% அமெரிக்காவிலிருந்தும், 8.57% பிரேசிலிலிருந்தும், 8.0% ஸ்பெயினிலிருந்தும் வந்திருக்கின்றன.
பெரும்பாலான தவறான செய்திகள் [85%] சமூகவலைத்தளங்களில் உருவாகிப் பரவுகின்றன. அவைகளில் 66 % பேஸ்புக்கின் வழியாகப் பரவுகின்றன. மொத்தமாக 90 %க்கும் அதிகமான கொவிட் 19 பற்றிய செய்திகள், விபரங்கள் இணையத்தளங்களின் மூலமாகவே பரவியிருக்கின்றன.
ஏற்கனவே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும் நாம் சந்திக்கும் செய்திகளில் உண்மை பற்றித் ஆராய்ந்து அறியும்படி சுட்டிக்காட்டியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்