எம்மி விருதுகள் பலவற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் பலவற்றையும் வென்றது “The Crown”.
தொலைக்காட்சிப் படைப்புக்களில் சிறந்தவை, சிறந்த நடிப்பு போன்ற பரிசுகளை வருடாவருடம் கொடுக்கும் எம்மி விருதுகள் அத்துறையிலிருப்பவர்களிடையே பெருமளவில் மதிக்கப்படுபவையாகும். கடந்த வருட விருது-விழா கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தொலைத்தொடர்புகள் மூலமே நடந்தது. இவ்வருட விழா நட்சத்திரங்களுடன், மீண்டும் நேரடிப் பங்கெடுப்புகளுடன் ஞாயிறன்று [19.09] நடந்தது. 500 விருந்தாளிகள் வரவேற்கப்பட்ட அப்பரிசுவிழா லாஸ் ஏஞ்சல்ஸில் திறந்தவெளியில் நடந்தது.
நெட்பிளிக்ஸின் The Crown, 24 விருதுகளுக்கும், அப்பிள் டிவி + இன்Ted Lasso, 20 விருதுகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. ஜேசன் சுடேக்கிஸ் Ted Lasso இல் தனதுத் தலைமைப் பாத்திரத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் பரிசை வெல்ல, அதே தொடர் சிறந்த நகைச்சுவைத் தொடர் என்ற விருதையும் தட்டிக்கொண்டு போனது.
அப்பிள் டிவி +, சுடேக்கிஸ் ஆகிய இருவருக்குமே இவை முதலாவது விருதுகளாகும்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரைப் பற்றியும், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியலைப் பற்றியும் விபரிக்கும் The Crown தொடர் மிகப்பெரும் வெற்றிப் படைப்பாகத் தொடர்கிறது. தொலைக்காட்சித் தொடர்களின் மிகச்சிறந்த படைப்பு என்ற விருதை வென்றது. நெட் பிளிக்ஸ் தொடரொன்று அப்பரிசை வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
மகாராணி எலிசபெத்தாக நடித்துவந்த ஒலீவியா கொள்மான் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். கடைசியாக வெளியான அத்தொடரின் நான்காவது பாகம் வரை அப்பாத்திரத்தை நடித்து வந்த கொள்மான் வயதான மகாராணியாகத் தொடர அப்பாத்திரத்தை ஐந்தாம் பாகத்திலிருந்து இமெல்டா ஸ்டௌண்டனிடம் கையளித்துவிட்டார்.
நாலாவது அத்தியாயத்தில் முக்கிய இடம் பெற்ற இளவரசர் சாள்ஸ் பாத்திரத்தை ஏற்று நடித்த ஜோஷ் ஓ-கொன்னர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் பாத்திரத்தில் தோன்றிய தோபியாஸ் மென்ஸிஸ், மார்கரேட் தாட்சர் பாத்திரத்தில் நடித்த கில்லியன் ஆண்டர்சன் ஆகியோர் சிறந்த துணை நடிகர், நடிகைக்கான பரிசுகளை வென்றார்கள்.
நெட் பிளிக்ஸின் குறு தொடரான The Queen’s Gambit இரண்டு பரிசுகளை வென்றது. எச்-பி.ஓ வின் Mare of Easttown மூன்று பரிசுகளை வென்றது.
சாள்ஸ் ஜெ. போமன்