மின்சாரமா, உணவா முக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவரும் பிரிட்டிஷ் பொதுமக்கள்.
மின்சாரத்துக்கான விலை சர்வதேச ரீதியில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் அதே நிலைமை சாதாரண மக்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறது. பிரிட்டனில் எரிவாயுவே தொடர்ந்தும் தொழிற்சாலைகள், வீட்டு மின்சாரம் ஆகியவைக்கு முக்கியமான எரிசக்திக்கு ஆதாரமாக இருக்கிறது. இதுவரை காணாத எரிவாயு விலையேற்றத்தைக் கோடை காலத்திலிருந்தே பிரிட்டிஷ் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் பல எரிவாயு விலையேற்றத்தைத் தாங்க முடியாமல் தமது தயாரிப்பை மூடிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக நாடெங்கும் பல உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
சமூகத்தின் வருமானம் குறைந்த மக்களின் நிலையோ அதைவிட மோசம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆரம்பித்து வரும் குளிர்காலத்தில் தமது வீடுகளைச் சூடாக்க முடியாத நிலை ஏற்படும் என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். வீட்டு மின்சாரத்துக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அதே சமயம் மின்சாரம் தயாரிக்கும் சிறு நிறுவனங்களும் தமக்குத் தேவையான எரிவாயுவுக்கான விலை அதிகமாகியிருப்பதால் தமது தயாரிப்பை நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய ராச்சியத்தின் சட்டம் மின்சார விலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்த்துவதைக் கட்டுப்படுத்துவதால் தமக்கு இலாபம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தயாரிப்பைத் தொடர்வது அவர்களுக்கு இயலாததாகிறது. அந்த நிறுவனங்களில் பல ஏற்கனவே பெருமளவில் கடன் சுமைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
எரிவாயுவிலையேற்றம், அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது. நாட்டின் வர்த்தக, தொழில் அமைச்சர் க்வாஸி கிவார்டெங் பேசுகையில், “இலாபமில்லாமல் செயற்படும் நிறுவனங்களுக்கு நாம் வரிகளின் மூலம் மிண்டுகொடுக்க முடியாது,” என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசு தங்களுக்கு மான்யம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் சிறு மின்சாரத் தயாரிப்பு நிறுவனங்கள் பல உதவியில்லாவிட்டால் திவாலாகிவிடும்.
அப்படியொரு நிலைமையில் நாட்டின் மிகப்பெரிய மின்சார நிறுவனங்கள் மட்டுமே செயற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. உணவுத் தட்டுப்பாடு, மின்சார விலையேற்றம் ஆகியவை வரும் வாரங்களில் மேலும் மோசமாகும்போது அரசின் நிலைமை பிரச்சினைக்குள்ளாகும் என்கின்றன பிரிட்டிஷ் ஊடகங்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்