நியூயோர்க்கில் நடக்கவிருந்த தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர மாநாடு ரத்து செய்யப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக நியூயோர்க்கில் நேபாளத்தின் தலைமையில் தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் மாநாடு [SAARC] நடைபெறுவதாக இருந்தது. அந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பில் தலிபான் இயக்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவேண்டும் என்று பாக்கிஸ்தானின் சார்பின் பிரேரிக்கப்பட்டதை அடுத்து சனியன்று நடக்கவிருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இந்தியா உட்பட சார்க் அமைப்பின் வேறு நாடுகளும் தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து அக்கூட்டத்தில் பங்கெடுப்பதை அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலான உலக நாடுகளும் தலிபான்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள இதுவரை தயாராக இல்லை. அத்துடன் பல குற்றங்களுக்காக ஐ.நா-வினாலான கறுப்புப் பட்டியலில் வைத்திருக்கப்படும் நபர்களே தலிபான்களின் அமைச்சரவையில் இருக்கிறார்கள்.

சர்வதேச ரீதியில் தீவிரவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரத்தியேக நபர்கள் நியூயோர்க்குக்குள் நுழைவதோ, ஐ.நா-வின் கூட்டங்களில் பங்கெடுக்கவோ போவதில்லை. ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சராகியிருக்கும் அமீர் கான் முத்தாக்கி ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி, தான் பொதுச்சபையில் உரை நிகழ்த்த அனுமதிக்கும்படி கேட்டிருந்தார். 

பொதுச்சபையின் கூட்ட விபரங்கள் ஒன்பது நாடுகள் கொண்ட பிரதிநிதிகளால் விவாதித்துத் திட்டமிடப்படும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட்ட நாடுகளடங்கிய அவ்வமைப்பு தலிபான்களின் வேண்டுகோளைப் பற்றி விவாதிப்பதற்று இம்முறை சமயமிருக்கப்போவதில்லை என்று குறிப்பிடப்படுகிறது. 

கடந்த வாரம் நடந்த ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டின் நாடுகளிடையே பேசிய இந்தியப் பிரதமர் மோடி “தலிபான் அமைப்பின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானின் சகல இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. அது பெண்களையும் சமூக வாழ்விலிருந்து ஒதுக்கிவைத்திருக்கிறது. அப்படியான ஒரு  அரசாங்கத்தை உலக அரங்கில் ஏற்றுக்கொள்வது பற்றி உலக நாடுகள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா-வின் காரியதரிசியும், “உலக அரங்கில் ஆப்கானிஸ்தானுக்குத் தலைவர்களாகப் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்று தலிபான்கள் பெருமளவில் முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய அந்த ஆவலைப் பாவித்து ஆப்கானிஸ்தானின் சகல தரப்பாரையும் சேர்த்துக்கொள்ளும் அரசாங்கத்தை அவர்கள் உருவாக்கச் செய்வதில் முழுமுயற்சி செய்யவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாக்கிஸ்தான் தவிர தலிபான்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடும் இன்னொரு நாடு கத்தார் ஆகும். கத்தாரின் அரசர் ஷேய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி, “தலிபான்களி இயக்கத்தை உலக நாடுகள் புறக்கணிக்கலாகாது. அவர்களை ஒதுக்குவது மேலும் அதிக பிளவையே ஏற்படுத்தும். தலிபான்களின் இயக்கத்தை உள்படுத்துவதன் மூலம் அவர்களை மெதுவாக மாற்றி அந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும்,” என்று ஐ.நா-வில் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *