சோமாலியாவில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் அரங்கில் சினிமா வெளியிடப்படவிருக்கிறது.
பூத்துக் குலுங்கிய முன்னொரு காலத்தில் சோமாலியாவின் தலைநகரில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது சாதாரணமாக இருந்தது. 1967 இல் மாசே துங்கால் நன்கொடையாக ஒரு தேசிய கலாச்சார அரங்கு ஒன்றும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பல நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்த அந்த அரங்கில் இதுவரை சோமாலிய மொழிச் சினிமா ஒன்றுமே இதுவரை திரையிடப்பட்டதில்லை.
சர்வாதிகாரி சியாத் பர்ரே 1991 ம் ஆண்டு நாட்டை விட்டு ஓடியதிலிருந்து நாட்டுக்குள் பல தரப்பினரிடையே போர் ஆரம்பித்தது. 2017 இல் ஐ.நா-வின் ஆதரவுடன் நடாத்தப்பட்ட தேர்தல்வரை நாட்டில் நிலையான தலைமை இருந்திருக்கவில்லை. நாட்டில் ஒரு அரசாங்கம் இருப்பினும் சோமாலியா தொடர்ந்தும் உள்நாட்டுப் போர்களைக் கொண்டிருக்கிறது.
சியாத் பர்ரேயின் ஆட்சி வீழ்ந்தபின் நிலவிவந்த போர்க்காலத்தில் மொகடிஷுவிலிருக்கும் தேசிய கலாச்சார அரங்கக் கட்டடம் வெவ்வேறு போர்க் குழுக்களின் ஆயுதக் கிடங்காகவும், காரியாலயங்களாகவும் பாவிக்கப்பட்டது. விளைவாகப் பல தடவைகள் குண்டுத் தாக்குதல்களுக்கு உட்பட்டு இடிபாடுகளாக மாறியது. 2012 இல் ஒரு தடவை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் குண்டுகளால் சின்னாபின்னமாகியது.
ஒரு வழியாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கும் மொகடிஷுவிலிருக்கும் கலாச்சார அரங்கில் இரண்டு குறும் சினிமாக்கள் இவ்வாரம் திரையிடப்படவிருக்கின்றன. சோமாலியக் கலைஞரொருவரின் படைப்பான அந்தச் சோமாலியச் சினிமா ஒன்றுக்குக் கட்டணம் தலைக்கு 10 டொலர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்