ஜோ பைடனின் ஆட்சியின் மீதான அதிருப்தியை வெர்ஜீனியாவின் ஆட்சித் தலைவர் தேர்தலில் காட்டிய வாக்காளர்கள்.
ஒரு வருடத்துக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த ஜோ பைடனின் டெமொகிரடிக் கட்சிக்கான பரீட்சை என்று கருதப்படும் பல பிராந்தியத் தேர்தல்கள் செவ்வாயன்று அமெரிக்காவில் நடைபெற்றன. அத்தேர்தல்களில் ஒன்றான வெர்ஜினியா மாநில ஆளுனர் தேர்தல் பெருமளவில் கவனத்தை ஈர்த்தது.
வாக்குகளை எண்ணும் பணி முடிவடையும் தருணத்தில் வெர்ஜினியாவின் ஆளுனராக இத்தேர்தலில் வெற்றிபெற்றிருப்பவர் ரிபப்ளிகன் கட்சியின் கிளென் யங்கின் [Glenn Youngkin] என்று தெரியவருகிறது. யங்கினுக்கு எதிராக பைடனின் டெமொகிரடிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டெரி மக்கலிப் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறார்.
ரிபப்ளிகன் கட்சியினரின் பலத்தையும், டெமொகிரடிக் கட்சியினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளால் அவர்கள் மீது வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் இத்தேர்தல் காட்டியிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த இரண்டு ஆளுனர் தவணைகளிலும் டெமொகிரடிக் கட்சியினரையே தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் இம்முறை ரிபப்ளிகன் கட்சிக்குப் பெருமளவில் வாக்களித்திருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அதேசமயம் வெர்ஜினியா மாநிலத்தினர் வழக்கமாகவே மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கெதிராகவே வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
வெர்ஜினியா மாநிலத் தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களிடையே பெரும் பிரச்சாரம் செய்து வந்திருந்தார். மீண்டும் தேர்தலில் நிற்பதா என்று இதுவரை அறிவிக்காத டொனால்ட் டிரம்ப்புடன் அதிகர் நெருக்கமில்லாதவர் யங்கின். அவர், தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப்பிலிருந்து தன்னை விலக்கியே காட்டி வந்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்