ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.
இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல குற்றங்கள் சாட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தது. 76 வயதான நாட்டின் தலைவருக்கு 4 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் இராணுவத்தை அவமதித்தமை, கொவிட் 19 சட்டங்களை மதிக்காதது ஆகிய இரண்டு குற்றங்களுக்காகவே மேற்கண்ட 4 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவ நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஔங் சான் சூ ஷீ மீது அவ்விரண்டையும் தவிர தேர்தல் ஏமாற்று, வரி ஏய்ப்பு, நாட்டு இரகசியங்களை வெளிப்படுத்தியமை போன்றவையும் அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களாகும். அவைகள் பற்றிய விசாரணைகளும், தீர்ப்பும் பின்னர் வெளியாகும். எனவே பல தசாப்தங்களுக்கு ஔங் சான் சூ ஷீ சிறையில் வைக்கப்படுவார் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஆட்சிக் கவிழ்ப்புச் சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த வின் மியிந்த் மீதும் அதே குற்றங்கள் சுமத்தப்பட்டு அதேயளவு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களிருவரும் சிறைக்கு எடுத்துச் செல்லப்படாமல் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பிலேயே தொடர்ந்து இருப்பார்களென்றும், மற்றைய குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவார்களென்றும் தெரிவிக்கப்பட்டது.
தமது தலைவர்களைக் கைது செய்து அரசைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராக மியான்மார் மக்கள் செய்துவரும் போராட்டங்கள் பல முனைகளில் தொடர்கின்றன. ஏற்கனவே சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டபின்னும் ஜனநாயக வழியில் மக்கள் ஊர்வலங்கள், கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஞாயிறன்று பல எதிர்ப்பு ஊர்வலங்கள் வெவ்வேறு நகரங்களில் நடந்தன. ரங்கூனில் நடந்த ஊர்வலத்தின் பின் பக்கமாக இராணுவ வாகனம் வேகமாக வந்து மக்கள் மீது மோதித் தள்ளியது. அந்தச் சம்பவம் பற்றிய படங்கள் பல சமூகவலைத்தளங்களில் பதிவாகியிருக்கின்றன. அதில் ஐவர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அதைக் கண்டவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்