“சவூதிய அரசகுமாரனை விட சவூதியுடனான உறவு முக்கியமானது,” என்கிறார் பிளிங்கன்.
டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படுத்தப்படாமல் மறைத்துவைக்கப்பட்ட கஷோஜ்ஜி கொலை பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை, தான் உறுதிகூடியபடியே வெளிப்படுத்தினார் ஜோ பைடன். எதிர்பார்த்தபடியே முஹம்மது பின் சல்மான் கொலைக்குப் பச்சைக் கொடி காட்டியது வெளியாகியிருக்கிறது.
நேரடியாக பட்டத்து இளவரசன் அந்த உத்தரவுகளைக் கொடுத்தது எப்படி நிரூபிக்கப்பட்டது போன்ற விபரங்களைக் கொடுக்காமல் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதை டெமொகிரடிக் கட்சிக்குள் இருப்பவர்கள் பலரும், சவூதி அரேபியாவின் எதிர்க்கட்சிகளும் “அமெரிக்காவின் பலவீனமான நடவடிக்கை” என்று விமர்சிக்கிறார்கள். வாஷிங்டனிலிருக்கும் அராபியன் பவுண்டேஷனின் முன்னாள் தலைவர் அல்-ஷிபீபி “இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், பட்டத்து இளவரசனுக்கு அக்கொலையிலிருக்கும் சம்பந்தம் பற்றிய முக்கியமான ஆதாரங்கள் இருக்கின்றன, அவற்றை அமெரிக்கா இப்போதும் வெளியிடவில்லை என்பதாகும்,” என்கிறார்.
சவூதி அரேபிய அரசு அமெரிக்கா வெளியிட்டிருக்கும் விபரங்களை முழுசாக மறுக்கிறது. பல சவூதியர்கள் “நாங்கள் ஒவ்வொருவருமே முஹம்மது பின் சல்மான்” என்று தங்கள் ஆதரவைப் பட்டத்து இளவரசனுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.
அறிக்கை வெளியிடப்பட்டபின் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்தார். “ஒரு தனிப்பட்ட நபரை விட சவூதி அரேபியா என்ற நாட்டுடன் எங்களுக்கு இருக்கும் உறவு பலமானது. அதை முறித்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. சவூதியுடனான முன்னாள் அமெரிக்க அரசின் தொடர்புவழியில் மாற்றங்களைக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, பட்டத்து இளவரசனைத் தண்டிப்பதில் அமெரிக்க அரசு ஈடுபடாது. இந்த அறிக்கை வெளிவர முதல் நாளே ஜோ பைடன் சவூதிய அரசன் ஷேக் சல்மான் பின் அப்துல் அசீஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜமால் கஷோஜ்ஜியின் கொலையில் சம்பந்தம் இருப்பதாகக் காணப்பட்டவர்களில் 76 சவூதியக் குடிமக்களுக்குப் பிரயாணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பட்டத்து இளவரசனின் பிரதான பாதுகாப்புப் படையிலிருக்கும் மேலும் ஏழு பேர் மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்களெல்லோரும் கஷோஜ்ஜி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களாகும். சவூதிய பட்டத்து இளவரசன் மீது எந்தவிடக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்