கும்ப்ரே வேய்யா எரிமலை கானரித் தீவில் தொடர்ந்தும் மக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கலாம் என்று தெரிகிறது.
லா பால்மா தீவில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிமலைக் குழம்பால் தாக்கப்பட்டு அழிந்திருக்கின்றன. ஹோட்டல்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,500 பேருக்கும் அதிகமானவர்கள் தமது வாழுமிடங்களிலிருந்து மீட்புப் படையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தீவுக்குச் செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த சில மணி நேரங்களில் எரிமலை ஓரளவு தணிந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அது மீண்டும் பொங்கியெழலாம், சுனாமி அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. 3 விமானங்கள், 57 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 180 இராணுவத்தினரும் எரிமலையை அடுத்த பகுதியில் மாறிவரும் நிலைமைக்கேற்றச் செயல்படத் தயாரான நிலையில் இருக்கிறார்கள்.
நியூ யோர்க்கில் நடக்கும் ஐ.நா-வின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுக்கச் செல்வதைத் தள்ளிப்போட்டிருந்த பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் செவ்வாயன்று மாலை அதற்காகப் புறப்படவிருக்கிறார்.
‘எரிமலை பொங்கியெழுவதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும், எனவே அதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும்,’ என்று திங்களன்று ஸ்பெயின் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்யேஸ் மராட்டோ சொல்லி அதற்காகப் பல கோணங்களிலிருந்து எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்