தேர்தல் நெருங்கிவரும்போது தமது முகமூடிகளைக் களைந்து எதிர்க்கட்சியை ஆதரிக்கும் பிரெஞ்ச் அரசியல் தலைவர்கள்.
கடந்த வாரங்களில் பிரான்சின் தேர்தல்கால அரசியல் தத்தம் கட்சியைக் காலைவாரிவிடும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளால் சூடு பிடித்திருக்கிறது. ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரான வலரி பெக்ரேஸ், சோசலிசக் கட்சித் தலைவரான ஆன் ஹிடால்கோவும் தமது கட்சிக்குள்ளிருந்து கொண்டு தமது முக்கிய எதிர்க்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்களின் அறிவிப்புக்களால் நிலைகுலைந்தார்கள்.
வலரி பெக்ரேஸின் கட்சியைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சிலர் தாம் முக்கிய எதிரியான ஆட்சியிலிருக்கும் இம்மானுவேல் மக்ரோனையே வரவிருக்கும் தேர்தலில் ஆதரிக்கப்போவதாக அறிவித்ததுடன் முகமூடி விலக்குதல்கள் ஆரம்பமாயின. பெக்ரேஸ் சமீப காலத்தில் பிரான்ஸின் பழமைவாத இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளையும், முஸ்லீம் சமூகங்களையும் குறிவைத்துத் தாக்கியதாலேயே அவர்கள் தமது ஆதரவை பெக்ரேஸிலிருந்து மாற்றிக்கொண்டதாகத் தெரியவருகிறது.
“அரசியல் இஸ்லாமும், தீவிரவாத இஸ்லாமும் எங்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக இருப்பினும், அதை மட்டுமே குறியாக வைத்து அரசியல் நடத்தலாகாது,” என்று தனது ஆதரவு மாற்றலுக்கான காரணமாக முன்னாள் ரிபப்ளிகன் அமைச்சர் எரிக் வோர்ட் தெரிவித்தார்.
அடுத்ததாக 2007 இல் சோசலிசக் கட்சியின் வேட்பாளராக இருந்த செகொலின் ரொயால் தனது கட்சி நண்பியான ஆன் ஹிடால்கோவைக் கைவிட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தார்.
“வரவிருக்கும் தேர்தலின் சோசலிசக் கோட்பாடுகளுக்காகக் குரல்கொடுக்கும் ஒரேயொரு முக்கிய வேட்பாளர் இடதுசாரி வேட்பாளரான ஷோன் லுக் மிலன்சோன் தான், இரண்டு விகித வாக்காளர்களின் ஆதரவுடனிருக்கும் ஆன் ஹிடால்கோ அல்ல. நான் அவருடைய இடத்தில் இருப்பேனென்றால் இப்போதே தேர்தலிலிருந்து பின்வாங்கியிருப்பேன்,” என்றார் செகொலின் ரொயால்.
மேலுமொரு முக்கிய வேட்பாளரான வலதுசாரிக் கட்சி தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் மரி லு பென்னுக்கும் இதே போன்ற அதிர்ச்சி கிடைக்காமலிருக்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த நிக்கொலாஸ் பேய் கட்சியின் இரகசியங்களை அதிதீவிர வலதுசாரிக் கட்சியின் எரிக் செம்மூருக்குக் களவாகக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். நிக்கொலாஸ் பேய் அதை மறுதலித்தாலும் கூட எரிக் செம்மூரின் கட்சிக்குத் தாவி அங்கே முக்கிய பதவியையும் பெற்றுக்கொண்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்