நோர்வேயில் பேச்சுவார்த்தைகள் நடத்த தலிபான்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்திருக்கும் தலிபான்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைகளுக்காக வரவேற்றிருக்கும் மேற்குலகின் முதலாவது நாடாகியிருக்கிறது நோர்வே. நாட்டின் வெளிவிவகார அமைச்சு அவர்களை அடுத்த வாரம் ஒஸ்லோவுக்கு வரவேற்றிருக்கிறது. நோர்வேயின் பிரதிநிதிகள் காபுல் சென்று தலிபான்களைச் சந்தித்த பின்னரே இந்த உத்தியோகபூர்வமான விஜயத்துக்கு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஒஸ்லோவுக்கு வரும் தலிபான்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் பிரதிநிதிகளையும், வேறு நாட்டு ராஜதந்திரிகளையும் அங்கே தலிபான்கள் சந்திக்க ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது.
“அவர்களை இங்கே வரவழைத்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அவர்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதல்ல. அந்த நாட்டு மக்களின் மோசமான வாழ்வின் நிலைமை கருதி நாட்டை உண்மையில் ஆள்பவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம்,” என்று நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அன்னிக்கென் ஹுய்ட்பெல்ட் குறிப்பிடுகிறார்.
பேச்சுவார்த்தைகளின் முக்கிய பேசுபொருட்களாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மனித குலப் பேரழிவு, மோசமான வரட்சி, பொருளாதார, உணவுப்பொருள் நெருக்கடி ஆகியவை இருக்கும் என்று நோர்வே அரசு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்