பென்சில்வேனியாவில் ஜோ பைடனின் வெற்றியைப் பறிக்க முயன்ற டிரம்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தோல்வி.

The application for injunctive relief presented to Justice
Alito and by him referred to the Court is denied.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதைப் பின்வாங்க வைக்கக் கோரிய ரிபப்ளிகன் கட்சியினருக்கு ஒரே வசனத்தில் பதிலளித்து மறுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.  டிரம்ப்பின் ஆதரவான மைக் கெல்லி என்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்த மாநிலத்தின் இரண்டரை மில்லியன் தபால் வாக்குகளைச் செல்லுபடியில்லையென்று தள்ளிவிடவேண்டுமென்று கேட்டிருந்தார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜோ பைடன் 80,000 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். அங்கே போடப்பட்ட பெரும்பாலான தபால் வாக்குகள் ஜோ பைடனுக்குக் கிடைத்திருந்ததால், அவ்வாக்குகளைச் செல்லுபடியாததாகக் கணித்துத் தனக்கே வெற்றியைத் தரவேண்டுமென்று டிரம்ப் தனது வழக்கில் கோரியிருந்தார்.

6 – 3 என்ற டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அதிகளவில் இருக்கும் உச்ச நீதிமன்றத்திலிருந்து இந்தத் தீர்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் டிரம்ப் தேர்தல் வழக்குகளில் தனக்கு ஆதரவாக இருக்கவேண்டுமென்ற விருப்பத்தில் நியமித்த நீதிபதி அமி பரட்டும் இத்தீர்ப்பில் பங்குபற்றியிருந்தார். எந்த ஒரு நீதிபதியும் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் பிறழவில்லை.

ஜனவரி 5 ம் தேதியில் வரவிருக்கும் ஜோர்ஜியா மாநில செனட் சபைக்கான தேர்தல்களில் தபாலில் வாக்களிக்காதீர்களென்று தனது ஆதரவாளர்களைக் கோரி வருகிறார் டிரம்ப். தற்போது உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் டிரம்ப் போட்டிருக்கும் ஒரு சில வழக்குகளே மிச்சமிருக்கின்றன. அவைகளில் டிரம்ப்புக்கு ஆதரவான தீர்ப்புக் கிடைப்பது மிக மிக அரிது என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *