சீனாவில் ஏறும் தூரியான் பழங்களின் மதிப்பு மலேசியக் காடுகளை அழிக்கிறது.
மலேசியாவின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படக் காரணமாக இருந்த பாமாயிலின் இடத்தைப் புதியதாகப் பிடித்து வருவது தூரியன் பழத் தோட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், சீனாவில் அப்பழத்துக்குச் சமீபகாலத்தில் எழுந்திருக்கும் மவுசு.
பாமாயில் தயாரிப்புக்காக விலைமதிப்பில்லாத மழைக்காடுகளை அழித்து வருவதாக முக்கியமாகக் குறிப்பிடப்படும் நாடுகள் இந்தோனேசியாவும் மலேசியாவுமாகும். இவ்விரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் 85 விகிதமான பாமாயிலைத் தயாரித்து வருகின்றன. சமீப வருடங்களில் அதுபற்றி ஏற்படுத்தப்பட்டுவரும் உலகளாவிய விழிப்புணர்வால் இந்த நாடுகளின் ஏற்றுமதி வருமானம் குறைந்து வருகிறது. அதனால் விலைகள் வீழ்ந்து வருவதால் பெரும் பாமாயில் தோட்டக்காரர்களின் வருமானம் குறைகிறது. எனவே புதியதாகக் காடுகளை வெட்டிப் பாமாயில் தயாரிப்பில் ஈடுபடுவது இலாபகரமில்லாமல் போயிருக்கிறது.
அந்த இடத்தை இட்டு நிரப்ப வந்திருப்பதுதான் தூரியன் பழவியாபாரம். மலேசியத் தோட்டக்காரகளின் சங்கத்தின் கணிப்புப்படி தற்போது தூரியன் பழ வியாபாரம் பாமாயிலைவிடப் பல மடங்கு அதிக வருமானம் தரும் தங்கவயல் போலாகிவிட்டது. சீனாவில் அப்பழத்துக்கு மிகப்பெரும் தேவை உண்டாகியிருக்கிறது.
சமீப வருடங்களில் அதிகரித்திருக்கும் சீனர்களின் வருமானத்தால் வித்தியாசமான எழுந்திருக்கும் பழக்கங்களில் வித்தியாசமான வெளிநாட்டுப் பழங்களைச் சாப்பிடுவதும் ஒன்றாகியிருக்கிறது. அவ்வகையில் தூரியன் பழங்களின் மீது பெருமோகம் அங்கே எழுந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தூரியன் பழத்தில் சுமார் 100 வகைகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று மலேசியாவில் தான் பயிரிடப்படுகின்றன. எனவே மலேசிய தூரியன் பழங்கள் சீனாவில் பெருமளவு மதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பழங்களின் கிலோ விலை சுமார் 40 எவ்ரோவாகும்.
இந்த நிலைமையில் இதுவரை சுமார் 2 விகிதமான சீனர்களே தூரியன் பழங்களைச் சுவைத்திருக்கிறார்கள் என்கிறது கணிப்பீடு. எனவே மலேசிய தூரியன் பழங்களுக்கான மவுசு மேலும் அதிகரிக்குமென்றே கருதப்படுகிறது. அது மலேசியாவின் காடுகளை மேலும் அழிக்கப்போகிறென்று கவலையுற்றிருக்கிறார்கள் நாட்டின் இயற்கைக் காவலர்கள்.
நாட்டின் அரைப் பாகத்தை எப்போதும் காடுகளாக வைத்திருக்கவேண்டுமென்று மலேசியா சர்வதேச அரங்கில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்தப் பெயரை அவர்கள் இழப்பார்களானால் அவர்களிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களது இறக்குமதியைக் குறைத்துக்கொள்வார்கள். எனவே, சீனரின் தூரியன் பழ மோகத்தால் அனுமதியின்றி அழிக்கப்படும் மலேசியக் காடுகளைப் பாதுகாக்க மலேசிய அரசு விழித்தெழவேண்டும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்