ஜெப் பேஸோஸ் அமெஸானின் தலைமைப் பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெஸானின் நிறுவனர் ஜெப் பேஸோஸ் உலகின் முதன்மையான பணக்காரருமாகும். வர்த்தகக் கணிப்புக்களையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரும் இலாபத்தைக் கடந்த வருடம் ஈட்டியிருக்கிறது அமெஸான் என்று அறிவிக்கப்பட்ட அதே சமயத்தில் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து இவ்வருடத்துக்குள் தான் ஒதுங்கிவிடுவேனென்று அறிவித்திருக்கிறார் ஜெப் பேஸோஸ்.
இணையத் தளங்களில் பொருட்களை விற்கும் நிறுவனமாக 1995 இல் பேஸோஸால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் அமெஸான். புதிய பொருட்களை உருவாக்கித் தயாரிப்புக்குக் கொண்டுவருவதிலுள்ள தனது ஈடுபாடுகளில் அதிக கவனம் செலுத்தப்போவதாக பேஸோஸ் அறிவித்திருக்கிறார். அத்துடன் தனது புதிய நிறுவனமான Blue Origin என்ற விண்வெளித் திட்டத்தை மேம்படுத்தவும், தனது வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தைக் கண்காணிக்கவும், மனிதாபிமானச் செயல்களில் கவனத்தைச் செலுத்தவுமிருப்பதாக எழுதியிருக்கிறார் அவர்.
1997 லிருந்து அமெஸான் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜெப் பேஸோஸின் நிறுவனத் தலைமை நிர்வாகி பதவியை ஆண்டி ஜஸ்ஸி ஏற்கவிருக்கிறார். அவர் தற்போது அந்த நிறுவனத்தின் இணைய-முகில் சேவைகளை நிர்வகித்து வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்