ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி அல்லது கட்சிக்காரரின் கையகப்படுத்திவரும் ஹங்கேரியின் ஆளும் கட்சி இறுதியாக அதையும் மூடுவதில் வெற்றிகண்டுவிட்டது.

நீண்ட காலமாகவே நாட்டில் தமது கட்சிக்கோ, அதன் கோட்பாடுகளுக்கோ எதிராகச் செயற்படுபவர்களையும், விமர்சிக்கும் ஊடகங்களையும், அமைப்புக்களையும் வாயடைக்கச் செய்து வரும் ஐரோப்பிய நாடுகள் இரண்டு. ஒன்று போலந்து மற்றது ஹங்கேரி. அதற்காக நாட்டின் நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் கூடத் தமக்கு ஆதரவானவர்களாகப் பார்த்து நியமித்து வருகின்றன இந்த நாடுகள். 

ஹங்கேரி தனது நாட்டின் ஊடகங்களைக் கட்டுப்படுத்த  ஊடகங்களைக் கண்காணிக்கும் குழுவொன்றை நியமித்திருந்தது. அதன் மூலம் தமக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மட்டுமே அரச விளம்பரங்களையும், பேட்டிகளையும் கொடுத்து வந்தது. நாட்டின் ஊடகங்களெல்லாம் தாம் வெளியிடப்போகும் விடயங்களைப் பற்றி ஊடகக் கண்காணிப்புக் குழுவுக்கு அறிவித்து அது அனுமதிக்கப்பட்டாலே அவைகளை வெளியிடலாம். 

கடந்த வருடத்தில் இரண்டு தடவைகள் தமது விபரங்களைப் பற்றி அறிவிக்கத் தாமதமான கிளப் ரேடியோவை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுடையே அனுமதிகளைப் பறித்துவிட்டது ஹங்கேரிய அரசு. அதன் விளைவாக அவர்கள் தொடர்ந்து செயற்பட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *