கழுத்தில் டை கட்டாமல் வந்த உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காத நியூசிலாந்து.
ரவீரி வைதிதி என்ற மாவோரி இனத்தைச் சேர்ந்த நியூசிலந்துப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற விவாத நேரத்தில் பங்கெடுக்க முயன்றபோது அவர் கழுத்தில் டை கட்டியிருக்கவில்லை என்ற காரணத்தால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பதிலாக அவர் கழுத்தில் மாவோரியர்களின் அடையாளமான பச்சைக்கல்லுடனான தவோங்கா என்ற அணிகலன் தொங்கிக்கொண்டிருந்தது.
கடந்த வருடம் நடந்த தேர்தலின் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த வைதிதி தனது முதலாவது பேச்சிலேயே “சப்பாத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட சிறு கல்லாக நான் இருப்பேன். மாவோரி என்ற எனது அடையாளத்தைக் காட்டிக்கொள்ள என்றும் தயங்க மாட்டேன்,” என்று சூளுரைத்தவர். கழுத்தில் டை கட்டிக்கொண்டுதான் பாராளுமன்றத்துக்குள் பேச வேண்டும் என்ற கட்டாயத்தை “ஒரு காலனித்துவக்கால எச்சம்,” என்கிறார்.
பெண் பிரதமரான யசிந்தா ஆர்டெனின் தலைமையில் முதல் தடவையாகப் பாதிப் பா.உ-க்களைப் பெண்களாகக் கொண்ட நியூசிலாந்துப் பாராளுமன்றம் வழக்கத்தை விடக் கடந்த தேர்தலின் பின்னர் நாட்டின் பல இன மக்களையும் சேர்த்திருக்கிறது.
120 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 11 விகித உறுப்பினர்கள் LGBTQI ஆகவும் 21 விகிதத்தினர் மாவோரி இனத்தவராகவும் இருக்கிறார்கள். சபாநாயகர் ட்ரேவர் மல்லார்ட் “பங்கெடுக்கும் உறுப்பினர்கள் டை கட்டியிருக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடரவேண்டுமென்று விரும்புகிறார்கள்,” என்கிறார்.
“டை கட்டுவதா இல்லையா என்பதைப் பற்றி வாதிப்பது ஒரு அனாவசியமான விடயமாக நான் கருதுகிறேன். நாங்கள் கவனிக்கவேண்டிய அதி முக்கியமான விடயங்கள் பல எங்கள் முன்னால் இருக்கின்றன,” என்று கருத்துத் தெரிவித்தார் பிரதமர் ஆர்டென்.
சாள்ஸ் ஜெ. போமன்