“இந்தியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும்”, என்று எச்சரிக்கும் அமைச்சர்!
இந்திய அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு சுமார் 1,100 கணக்குகளை மூடிவிட மறுத்த டுவிட்டரைக் கண்டித்திருக்கிறார் இந்திய தொலைதூரத் தொழில்நுட்ப அமைப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். குறிப்பிட்ட அந்தக் கணக்குகளின் மூலம் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுவதாக இந்தியா குறிப்பிட்டிருந்தது.
“பேஸ்புக், டுவிட்டர், வட்ஸப், லிங்க்டின் போன்ற சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க விரும்பினால் இந்தியாவின் சட்ட, ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்,” என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புதனன்று இந்திய அரசு குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகளைத் தாம் மூடியதாகவும், பின்னர் ஆராய்ந்ததில் அவைகளில் பல விவசாயிகள் போராட்டங்கள் பற்றியே எதுவும் குறிப்பிடாதிருந்த பட்சத்தில் அவைகளை மீண்டும் திறந்ததாகவும் டுவிட்டர் குறிப்பிட்டது. அத்துடன் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் தாம் மீண்டும் திறந்திருப்பதாகத் தெரிவித்தது.
இந்திய அரசு கருத்துச் சுதந்திரத்துக்கு இடம் கொடுத்திருப்பதாகவும் அதனால் கருத்துக்களைப் பொது மக்களிடையே பரப்புபவர்களைத் தடை செய்வது அரசியல் சட்டத்துக்கு முரணானது. டுவிட்டரின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக நடப்பவர்களின் கணக்குகள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூடப்படும். அத்துடன் இந்திய அரசு மூடச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்திய கணக்குகள் இந்தியாவுக்கு வெளியே காணக்கூடியதாக இருக்கும் என்று டுவிட்டர் தெரிவித்தது.
சாள்ஸ் ஜெ. போமன்