இரகசியமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெருவின் வெளிவிவகார அமைச்சர் பதவி விலகினார்.
கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதில் பெரு நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் செய்த முறைகேடுகள் வெளியாகி நாட்டை அதிரவைத்திருக்கின்றன. அப்படியாக ஜனவரியிலேயே எல்லோருக்கும் முதல் இரகசியமாக முதலாவது ஊசியைப் போட்டுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் எலிசபெத் அஸ்தேதே தனது நடவடிக்கை நாட்டு மக்களைக் கோபப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை, என்று கூறிப் பதவியிலிருந்து விலகினார்.
சுமார் 32 மில்லியன் குடிமக்களைக் கொண்ட பெருவில் 1.2 மில்லியன் பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் தொகை சுமார் 44,000. இவர்களில் 306 மருத்துவர்கலும் 125 தாதிகளும் அடக்கம். மேலும் 20,000 மருத்துவ சேவையாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் நாட்டுக்குச் சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்திருக்கின்றன.
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பு மருந்துகள் வாங்கிக்கொள்வதற்காகப் பேரம் பேசிக் கையெழுத்திட்ட அஸ்தேதே அதன் விலையை வெளியிடவில்லை. தான் செய்த தவறை உணர்ந்ததால் தான் இரண்டாவது ஊசியைப் போடவில்லை என்கிறார் அவர்.
லஞ்ச ஊழல்களுக்காக நவம்பர் மாதத்தில் பதவியிலிருந்து இறக்கப்பட்ட மாஜி ஜனாதிபதி மார்ட்டின் வின்சாரா தானும் தனது மனைவியும் ஒக்டோபர் மாதத்திலேயே கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டதாகப் பத்திரிகைகளுக்குக் கூறியிருந்தார்.
அதையடுத்து மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பிலார் மஸெட்டி பெருவுக்குச் சினோபார்ம் தடுப்பு மருந்துகள் 2,000 ஒக்டோபர் மாதத்திலேயே கிடைத்ததாகவும் அதை உயரதிகாரிகளுக்குக் கொடுத்ததாகவும் டுவீட்டினார். அவ்விடயத்தை இரகசியமாக வைத்திருந்த காரணத்துக்காக அவர் வெள்ளியன்றே பதவி விலகியிருக்கிறார்.
வந்த மருந்துகளைப் பற்றிய விபரங்களை இரகசியமாக வைத்திருந்து அந்த மருந்தைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அனைவரையும் பதவி விலகும்படி தற்போதைய ஜனாதிபதி பிரான்ஸிஸ்கோ சகஸ்டி ஆணையிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்