ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.
வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச் சட்டபூர்வமான குடியுரிமைகளைக் கொடுப்பதாக கொலம்பியா தெரிவித்திருக்கிறது.
கொலம்பிய ஜனாதிபதியும், ஐ-நா-வின் அகதிகளுக்கான உயரதிகாரியும் சேர்ந்து இந்த முடிவை அறிவித்தார்கள். இந்த நகர்வு உலகம் முழுவதும் பெரும் பாராட்டைக் கொலம்பியாவுக்குக் கொடுக்கிறது. வெனிசுவேலாவின் அகதிகளில் பெரும்பாலானோர் – சுமார் 1.7 மில்லியன் பேர் – கொலம்பியாவில் எவ்வித உரிமைகளுமின்றி அகதிகளாக வாழ்கிறார்கள்.
ஆரம்பக் கடத்தில் 10 வருடங்கள் கொலம்பியாவின் சகல குடியுரிமைகளும் குறிப்பிட்ட வெனிசுவேலா அகதிகள் பெறலாம். அத்துடன் அவர்களுக்கு நிரந்தரக் குடிமக்களாகவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஜனவரி 31 ம் திகதிக்குள் கொலம்பியாவுக்குள் தஞ்சம் புகுந்து தம்மைப் பதிந்து கொண்டவர்களுக்கே குடியுரிமை கிடைக்கிறது. மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
“எங்களைப் போலவே எங்கள் பக்கத்து நாட்டினரும் வெனிசுவேலாவின் அகதிகளுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று கொலம்பிய ஜனாதிபதி இவான் டுக்கே தெரிவித்தார்.
“பெரும் மனிதாபிமான முடிவொன்றைச் செய்திருக்கும் கொலம்பியாவுக்குப் பக்கபலமாக நாம் இருப்போன்,” என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்