தஞ்சம் தேடிய அகதிகளை விண்ணப்பிக்க விடாமல் விரட்டியதற்காக இத்தாலிய அரசு தண்டிக்கப்பட்டது.
இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று குறிப்பிடப்படுகிறது.
கொரோனாத் தொற்றுக்களுக்காக நாட்டின் பாகங்கள் மூடப்பட்டதைச் சாக்காக வைத்து ஸ்லோவேனியாவிலிருந்து திரையஷ்டே நகர இத்தாலிய எல்லைக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இத்தாலியப் பொலீசார் கைப்பற்றி ஸ்லோவேனியாவுக்குள் திருப்பியனுப்பினர். வெவ்வேறு சமயங்களில் நடந்த இந்த திருப்பி விரட்டலுக்கு அகப்பட்டவர்களை ஸ்லோவேனியா தனது அண்டை நாடான கிரவேஷியாவுக்குத் துரத்தி விட அந்த நாடோ அந்த அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருக்கும் தனது எல்லை நாடான பொஸ்னியாவுக்குத் திருப்பியனுப்பியது.
இத்தாலியப் பொலீசாரின் இந்த நடவடிக்கையை அந்த நாட்டு மனித உரிமை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல அங்கிருந்து இத்தாலிக்கெதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தீர்ப்பில் இத்தாலிய அரசு தஞ்சம் கோரி வந்தவர்களின் உயிருக்கும் இந்த நடவடிக்கையால் ஆபத்தை உண்டாக்கியிருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இத்தாலியப் பாராளுமன்றத்திலும் இதுபற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது தாம் இதைச் செய்ததாக இத்தாலிய அமைச்சர் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
pushback நடவடிக்கையில் ஈடுபடுவதாக கிரவேஷியா, ஹங்கேரி, கிரீஸ் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைகளும் குற்றஞ்சாட்டப்பட்டு அவைகள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்