கத்தலோனியாவின் தலைநகரான பார்ஸலோனாவின் கலவரங்கள் தொடர்கின்றன.
ஸ்பெய்னில் கத்தலோனியத் தேர்தல்களையடுத்து உண்டாகிய கலவரங்கள் பார்ஸலோனா நகரில் வன்முறை, ஊர்வலங்கள், சூறையாடுதல்களுடன் தொடர்ந்து வருகின்றன. இந்த நடப்புக்களின் நடுவில் ஒரு ரப் இசைக்கலைஞர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.
எதிர்பாராதவிதமாக பார்ஸலோனாவின் அரசியல் கலவரங்களுக்கு நடு நாயகமாக மாறியிருக்கும் பவுலோ ரிவால்டுல்லா டூரோ என்ற ரப் இசைக் கலைஞர் Hasél
என்ற பெயரில் தோன்றுபவர். கடும் இடதுசாரியான அவரது பாட்டு வரிகள் ஸ்பெய்ன் அரச குடும்பத்தினரை, ஆளும் பழமைவாதிக் கட்சியைத் தாக்குவதுடன் கத்தலோனியத் தனிநாட்டுக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவானவையாகும். அவைகளில் வன்முறைகளும் கலந்திருப்பதுண்டு.
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வன்முறையுடன் வெளியிட்ட பதிவுகளுக்காக Hasél நீதிமன்றத்தில் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்த தேர்தலின் பின் அவர் தனது ஆதரவாளர்களுடன் பார்ஸலோனா பல்கலைக்கழகத்தில் தங்கிவருகிறார். பொலீஸார் அவரைக் கைப்பற்றாமல் அவரது ஆதரவாளர்கள் உதவுகின்றனர்.
ஸ்பெயினில் நீண்டகாலமாக நிலவிவரும் இளவயதினரிடையேயான வேலைவாய்ப்பின்மை, மோசமான வீட்டு வசதிகள், ஏழ்மை போன்றவையால் மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். 2014 இல் முடிதுறந்த ஸ்பெயினின் அரசன் யுவான் கார்லோஸ் செய்த மோசமான ஏமாற்றுவேலைகளால் மக்கள் அரச குடும்பத்தின் மீதும் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் சேர்ந்தே மக்களை இப்படியான கலவரங்களுக்குத் தூண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இக்கலவரக்காரர்களுக்கு மக்களிடையே செல்வாக்கும் அதிகரித்து வந்திருப்பதால் ஸ்பானிய அரசு இறங்கிவந்து தாம் இசைக்கலைஞரின் தண்டனையைக் குறைக்கக் கூடியதாகச் சட்டங்களை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறது. ஆனாலும் மக்கள் போராட்டம், கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்