சீன மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சீனத் தலைவர் ஷீ யின்பிங் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.
1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் குறுகிய காலத்தில் வறுமை வெற்றிகொள்ளப்பட்டது ஒரு அதிசயம் என்று சரித்திரத்தில் பொறிக்கப்படும் என்று தனது பிரகடனத்தில் நாட்டின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமலிருந்த 770 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் குறியான உலகின் வறுமையை 2030 க்குள் ஒழித்துக்கட்டுவது என்பதை விடச் சீனா முதலிலேயே அக்காரியத்தைச் செய்துவிட்டதென்றார் அவர். குறிப்பிட்ட அதிசயத்தை நிகழ்த்திய அதே சமயத்தில் சீனா அதன் பக்கவிளைவாக உலகில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தவர்களில் 70 விகித மக்களின் வறுமையையும் இல்லாமல் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டார் ஷீ யின்பிங்.
அதே சமயம் பொருளாதார அபிவிருத்தி பற்றிக் குறிப்பிடுகையில் தான் பதவியேற்றது முதல் இதுவரை 246 பில்லியன் டொலர்களை வறுமை ஒழிப்புக்காகச் செலவிட்டிருப்பதாகச் சொன்னார். ஷீ யின்பிங் 2012 இல் சீனாவின் தலைவராகப் பதவியேற்றபோது சீனாவின் 100 மில்லியன் பேர் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தார்கள். அச்சமயத்தில் முழுவதும் வறுமையை ஒழிப்பதாக அவர் பிரகடனம் செய்திருந்தார்.
வறுமைக்கோடு என்பது உலக வங்கியின் கணிப்பில் தினத்துக்கு 1.90 டொலர்கள் வருமானம் உள்ளவராகும். சீனாவின் கணிப்பில் தினத்துக்கு 1.69 டொலர்கள் வருமானம் உள்ளவர் அல்லது மாதத்துக்கு 620 டொலர்கள் வருமானம் கொண்டவர் என்பதாகும்.
இவ்வருட நடுப்பகுதியில் சீனா தனது நாட்டை ஒரு “மத்தியதர சுபீட்சமடைந்த நாடு,” என்று பிரகடனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து 2049 இல் “சுபீட்சமுள்ள, பலமான, ஜனநாயக, முன்னேறிய கலாச்சாரங்களைக் கொண்ட ஒற்றுமையான நாடு,” ஆக்கப்படும் என்பது சீன கம்யூனிசக் கட்சியின் குறியாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்