பாப்பரசருக்கு எச்சரிக்கை மணி கட்டும் தைரியம் யாருக்கு வரும்?
இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்ட ஈராக்கிய கிறீஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், கொடும் தொற்று நோய் பரவுதல் தொடரும் இச்சமயத்தில் பாப்பரசர் அவ்விஜயத்தை மேற்கொள்வது ஈராக்கியர்களுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ சேவையிலிருக்கும் முக்கியஸ்தவர்கள் பலர்.
ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை ரோமிலிருந்து புறப்படும் பாப்பரசர், அன்றே பக்தாத்தில் இறங்கி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படுவார். அதன் பின்னர் அவர் சமய, சமூக, ராஜதந்திரிகளைச் சந்திப்பார்.
அதற்கடுத்த நாள் அவர் நஜாப் நகருக்குப் பயணமாவார். அங்கே அவர் ஷீஷா இஸ்லாத்தின் முக்கிய தலைவர்களிலொருவரான அலி அல்-சிஸ்தானியுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். அதை முடித்துக்கொண்டு பக்தாத் திரும்பி அங்கே ஒரு திருப்பலி சேவையில் பங்குகொள்வார்.
அவரது விஜயத்தின் கடைசி தினமான ஞாயிறன்று குர்திஷ்தான் பிராந்தியமான எர்பில், மோசுல் ஆகிய நகரங்களுக்குப் பிரயாணமாவார். ஈராக்கின் பெரும்பாலான கிறீஸ்தவர்கள் வாழ்ந்த பகுதிகள் அவை. போர்களில் பெருமளவில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களும் அவை. அங்கே அவர் இறந்துபோன மக்களுக்காகத் தனது அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவார்.
அதையடுத்து கரகோஷ் என்று அழைக்கப்படும் ஹம்தானியா நகரில் வாழும் கிறீஸ்தவர்களைச் சந்திப்பார். ஈராக்கின் கிறீஸ்தவ தலைநகரென்று குறிப்பிடப்படும் அந்த நகரிலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் வாழ்ந்தார்கள் ஐ.எஸ் மிலேச்சர்களினால் விரட்டப்பட்டவர்கள். அங்குள்ள கிறீஸ்தவத் தேவாலயங்களெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு, அவைகளில் பல திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
கரகோஷ் நகரில் கிறீஸ்தவர்களைச் சந்தித்தபின்னர் பாப்பாண்டவர் மீண்டும் எர்பில் திருமி அங்கிருக்கும் மைதானமொன்றில் புனித திருச்சேவை செய்தபின் ரோம் திரும்புவார்.
பாப்பாண்டவருடன் பயணிக்கும் 20 பேரும், அவர்களைத் தொடரும் பத்திரிகையாளர்களில் + 70 வயதுக்காரரும் தங்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஈராக்கின் வெவ்வேறு பகுதிகளிலும் பாப்பரசரின் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கப்போகிற கிறீஸ்தவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை.
பாப்பரசரின் வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதை இம்முறை நிறுத்தினால் மீண்டும் அச்சந்தர்ப்பம் ஈராக்குக்கு எப்போது கிட்டுமோ என்ற எண்ணத்தில் ஈராக்கியர்கள் அதைத் தடுக்க முயலப்போவதில்லை. இவ்விஜயத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது ஈராக்கிய அரசுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையும் கூட.
ஆனால், பெருந்தொற்றுப் படுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் ஈராக்கிய மக்களைப் பெருங் கூட்டமாகக் கூட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்குவது பாப்பரசருக்கு நியாயமாகப் படுகிறதா என்ற கேள்வி நோய்த் தொற்று விற்பன்னர்கள் பலரால் எழுப்பப்படுகிறது.
பாப்பாண்டவர் தனது விஜயத்தில் ஈராக்கிய மக்கள் நெருக்கமாகக் கலந்துகொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். முடிந்தவரை நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் காணும்படி அறிவுறுத்துகிறார். ஆனால், விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மத்திய கிழக்கு மக்கள், பாப்பரசரை ஒரு புனிதராகக் கருதும் கத்தோலிக்கர்கள் அவரைக் காணக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தைத் தவற விடுவார்கள் என்பது நம்ப முடியாதது என்கிறார்கள் மருத்துவ சேவையாளர்கள்.
பாப்பரசர் பங்கெடுக்கப்போகும் பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் சமூக விலகலும், முகக்கவசமணிதல் போன்றவையும் கடுமையாக அனுசரிக்கப்படும் என்று ஈராக்கிய அதிகாரிகள் உறுதி கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சிகள் பெரும் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான மையங்களாகக் கூடுமென்று எச்சரிக்கிறார்கள் பல விஞ்ஞானிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்