இந்தியர்கள் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றக் கொலைகள் செய்வதைத் தடுக்கச் சட்டம் வேண்டுமா?
தன் 17 வயது மகள் இளைஞனொருவனுடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்ட அப்பா அவளுடைய தலையை வெட்டியெடுத்துக்கொண்டு பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலத் தளங்களில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது.
இன்னொரு அப்பா தலித் ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட தன் மகள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தால் பாதுகாப்புப் பெற்றிருந்தும் அவளைக் கொலை செய்திருக்கிறான். இதேபோன்று சாதி, மத, இன, பேதங்களுடனான தொடர்புகள் போன்றவைக்காகத் தமது பெண் மக்களைக் கொல்லும் பெற்றோர்கள் இந்தியாவின் சகல திசைகளிலும் அன்றாடம் சாதாரணமாக நடப்பதே.
கழுத்தை வெட்டி மகளைக் கொலைசெய்து அத்தலையை எடுத்துக்கொண்டு மற்றக் கையில் வெற்றிச் சின்னத்துடன் நடந்த சர்வேஷ் குமார் போன்றவர்கள் சொல்லும் காரணம் தாம் தமது குடும்ப, இன, சாதிக் கௌரவத்தைக் காப்பாற்ற அதைச் செய்தார்கள் என்பதாகும். இவன் பெருமையுடன் அத்தலையுடன் நடந்த படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி இளவயதினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால் கௌரவக் கொலைகளுக்கு எதிராகத் தனியான சட்டமொன்றை வகுக்கவேண்டுமென்று இந்தியாவில் குரல் எழும்பியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்