தென் சீனக் கடல் பிராந்தியத்தை நோக்கி ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் அனுப்பப்படவிருக்கின்றன.
வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் ஆசியாவை நோக்கிப் புறப்படுகின்றன. ஏற்கனவே போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் சீனக் கடல் பகுதிகள் வழியாக அது பயணிக்கும். 2002 ம் ஆண்டுக்குப் பின்னர் அப்பகுதியில் ஒரு ஜேர்மன் போர்க்கப்பல் பயணிப்பது இதுவே முதல் தடவையாகும்.
சர்வதேசக் கடல் பிராந்தியத்தில் சட்டத்தை மதித்து, வெவ்வேறு நியாயமான காரணங்களுக்காகப் பயணிப்பதில் இருக்கும் உரிமையை அமெரிக்காவுக்குச் சாதகமாகக் காட்டும் ஜேர்மனியின் முடிவு வரவேற்கப்படுகிறது என்கிறது அமெரிக்கா. சீனாவும், சர்வதேசக் கடலில் உலக நாடுகளின் கப்பல்கள் பயணிப்பதில் ஆட்சேபனையில்லை என்று குறிப்பிடும் அதே தருணத்தில், அவ்வுரிமையைப் பிரயோகித்து அக்கடலையடுத்து இருக்கும் நாடுகளின் எல்லைகளை மீற எத்தனிப்பதை அனுமதிக்கலாகாது என்று எச்சரிக்கிறது.
சீனாவும், அதன் எதிரி நாடுகளும் குறிப்பிடும் எல்லைகளுக்கு அருகே தங்கள் கப்பல் போகாது என்று குறிப்பிடுகிறது ஜேர்மனி. சீனா தனது எல்லைகளுக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் செயற்கைத் தீவுகளை உண்டாக்கி அவற்றில் தனது இராணுவத்தைக் காவலுக்கு நிறுத்தியிருக்கிறது. அந்த நடவடிக்கைகளால் சில ஆண்டுகளாகவே சீனாவின் எல்லை நாடுகளும், அவைக்கு ஆதரவாக அமெரிக்காவும் சீனாவைக் கண்டித்து வருகின்றன.
சமீபத்தில் தனது நாட்டின் போர்க்கப்பலும், நீர்மூழ்கிக் கப்பல்களும் தென் சீனப் பிராந்தியத்தின் சர்வதேசக் கடற்பகுதியில் பிரயாணித்ததாக பிரான்ஸ் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்