மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் இறந்தவர்கள் 50 விட அதிகம்.
பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டின் ஜனநாயகத் தேர்தலில் வென்றவர்களை ஆட்சியேறவிடாமல் தடுத்துக் காவலில் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் நாட்டின் இராணுவத்தில் அராஜக நடவடிக்கைகள் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. எதிர்த்து ஊர்வலம் போகிறவர்களிடையே வேட்டையாடிச் சுமார் 50 பேரை இதுவரை இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது.
https://vetrinadai.com/news/dead-myanmar-demonstrations/
புதனன்று இதுவரை நடந்ததை விட மிக மோசமாக இராணுவமும் பொலீசாரும் மக்களைத் தாக்கிய நாளாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் ஐ.நா-வின் மியான்மாருக்கான பிரத்தியேக தூதுவர் கிரிஷ்தீன் ஷ்ரேனர். ஒரே நாளில் 38 பேரின் உயிர்களைப் பலியெடுத்தது இராணுவம்.
சமூகவலைத்தளங்களெங்கும் மியான்மாரின் ஊர்வலங்களில் இராணுவமும், காடையர்களும் பொது மக்களை எப்படி இரக்கமின்றித் தாக்கி இரத்தக்களறியாக்கி வருகிறார்கள் என்பதைக் காட்டும் படங்களால் நிறைந்து வருகின்றன.
29 பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 1,700 பேரை இராணுவம் கைது செய்திருக்கிறது. அவர்கள் மீது நாட்டின் அமைதியைக் குழப்பிக் கலவரங்களைத் தூண்டிவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அது சுமார் 3 வருடங்கள் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றமாகும். ஆனால், தமது தலைவர்களை விடுதலை செய்யக்கோரி வீதிக்கு வந்து குரல் கொடுப்போரின் உத்வேகத்தைக் குறைக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
மியான்மாரின் பக்கத்து நாடுகள், ஐ.நா.சபை, ஆசியான் அமைப்பு போன்ற பல கோணங்களிலிருந்து மியான்மார் இராணுவத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளேதும் பலன் கொடுத்ததாகத் தெரியவில்லை. இராணுவத் தலைமை தம்மைத் துச்சமாக மதித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வியாழனன்று அமெரிக்கா மியான்மார் இராணுவத்தினரின் முக்கியமானவர்களுக்கும், நாட்டின் அமைச்சுகள் அதைச் சார்ந்தவர்களுக்கும் பொருளாதார வர்த்தகத் தடை அறிமுகம் செய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்