எதிர்பார்த்ததை விட வேகமாக பிரிட்டிஷ் அரச குடும்பம் ஹரி – மேகன் தம்பதியரின் குற்றச்சாட்டுகளை நேரிட்டது.
ஓபெரா வின்பிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மகனும் மனைவி மேகனும் தோன்றித் பிரிட்டிஷ் அரச குடும்ப வாழ்க்கை தமக்கு எப்படியிருந்தது என்பதைத் தங்களது கோணத்தில் வெளியிட்டிருந்தார்கள். உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்த்த அவ்விடயத்தை அரச குடும்ப ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், மேகன் – ஹரி தம்பதிகளின் உணர்வை ஏற்றுக்கொண்டவர்கள் இன்னொரு பக்கமுமாக நின்று வாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் அக்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார்களா, எப்போது, எப்படி எதிர்கொள்வார்கள் என்பது பற்றிய சகலரின் கணிப்பையும் மீறி படு வேகமாகத் தங்கள் பதிலை அளித்திருக்கிறது பிரிட்டிஷ் அரச குடும்பம். இவ்வார இறுதியில் தான் மகாராணி பிரிட்டிஷ் மக்களுக்குத் தொலைபேசியில் கொடுக்கப்போகும் செய்திக்கு முதலாகவே ஹரி – மேகன் உணர்வுகள் பற்றி மறுமொழி வந்துவிட்டது.
எந்த வகையிலும் ஹரி – மேகன் தம்பதிகளின் சுட்டிக்காட்டுதலை அலட்சியப்படுத்தவில்லை பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர். பதிலாக மிகவும் நேர்மையுடன் எதிர்கொண்டு, “அவர்களுடைய வாழ்க்கை அரச குடும்பத்தில் அத்தனை வேதனையாக இருந்ததை அறிந்து வேதனையடைகிறோம்,” என்கிறது வெளியிடப்பட்ட அறிக்கை.
“ஹரியும் மேகனும், ஆர்ச்சியும் என்றும் எங்கள் குடும்பத்தின் அன்புக்குரியவர்களாக இருப்பார்கள். நிறவாதம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எங்களை அதிரவைக்கின்றன. வெவ்வேறு அங்கத்தவர்களின் வெவ்வேறு நினைவுகள் வித்தியாசமாக இருக்கக்கூடும். அவைகளை நாங்கள் மிகவும் கவனத்துடன் குடும்பத்துக்குள் கையாளுவோம்,” என்று ஆர்ச்சியின் நிறம் பற்றி வெளியிடப்பட்ட எண்ணங்களைப் பற்றிய கருத்துக்கு பக்கிங்ஹாம் அரண்மனை பதிலளித்திருக்கிறது.
ஹரியின் தந்தை இளவரசர் சார்ள்ஸ் தன் பங்குக்கு எந்தவிட கருத்தும் சொல்ல மறுத்துவிட்டார். “பிரிட்டிஷ் மஹாராணி மீது எனக்கு மிகவும் மதிப்பு இருக்கிறது. அவர் பிரிட்டனின் அரசியலில் செய்யும் உதவிகளை நான் வரவேற்கிறேன். அவர்களுடைய குடும்ப விடயங்களில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை,” என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்