லெபனான் மக்கள் ஏழாவது நாளாக நாட்டின் முக்கிய வீதிகளை மறித்துப் போராடுகிறார்கள்.
ஒரு வருடத்துக்கும் மேலாக லெபனானின் அரசியல் ஸ்தம்பித்து போயிருக்கிறது. மதங்கள், இயக்கங்கள், இனங்கள் ஒரு பக்கமிருக்க, ஈரான், இஸ்ராயேல், சவூதி அரேபியா, பாலஸ்தீனர்கள் ஆகியோர் வெவ்வேறு பக்கங்களிலிருந்து இழுக்க நாட்டுக்கு ஒரு ஒழுங்கான தலைமையின்றி லஞ்ச ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.
நாட்டின் மத்திய வங்கி, முக்கிய நகரங்கள் ஆகியவற்றை நெருங்க முடியாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து வருகிறார்கள். 2019 இல் பல வாரங்களாகப் போராடி நாட்டின் அப்போதைய தலைமையை விலகவைத்தார்கள் மக்கள். ஆனால், அதன் பின் யார் நாட்டின் ஆட்சியிலிருப்பது என்பது இன்னும் நிச்சயமாகவில்லை.
லெபனான் நாணயமான பவுண்ட்டின் குறைந்து பெறுமதி கடந்த வாரத்தில் 85 % விகிதத்தை எட்டியிருக்கிறது. படு வேகமாக வீழ்ந்துவரும் நாணயத்தால் நாட்டின் வங்கிகள் மூடியிருக்கின்றன. பொருளாதாரம் ஸ்தம்பித்து போயிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை இழந்திருக்கிறார்கள், நிறுவனங்கள் செயற்பட முடியாமலிருப்பதால். பல்லாயிரக்கணக்கானோர் சகலத்தையும் இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு வருடத்துக்கு முன்னர் கலைந்துவிட்ட பாராளுமன்றத்தின் பின்னர் புதிய பிரதமராக வரவிருக்கும் சாட் ஹரீரியும் ஜனாதிபதி மைக்கல் அவுனும் ஒருவருடனொருவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஹஸன் டியாப் என்ற முன்னைய பிரதமரே இடைக்காலப் பிரதமராகச் செயற்பட்டு வருகிறார். எவ்வித அரசியல் முடிவும் எடுக்க முடியாமல் முடமாகிப்போயிருக்கும் சந்தர்ப்பத்தில் தானும் எதுவும் செய்யமுடியாமலிருப்பதாகக் கூறி ஹஸன் டியாபும் விலகப்போவதாக மிரட்டி வருகிறார்.
நாட்டில் என்றுமேயில்லாத ஒரு குழப்ப நிலைமை உருவாகியிருக்கிறது. வீதி மறிப்புக்களை விலக்கிவிடுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மக்கள் கொதிப்படைந்து வருகிறார்கள். தொடர்ந்தும் லெபனானின் நாணயம் பலமிழந்து வருகிறது. எவருக்கும் எந்தத் தீர்வும் கண்ணுக்குத் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்