பெண்கள் மீதான வன்முறை:பாண் சுற்றும் உறைகள் மீதுவிழிப்பூட்டும் பதிவுகள் அச்சு!
பிரான்ஸில் ‘பக்கெற்’ (baguettes) எனப்படுகின்ற சாதாரண பாண் நாளாந்தம் பெரும்பாலானோர் நுகர்கின்ற பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு பாண் வாங்குவோரிடம் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் வீட்டு வன்முறைகள்(Domestic violence) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவிதத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விழிப்பூட்டும் விடயங்கள் அச்சிடப்பட்ட பாண் சுற்றும் கடதாசிப் பைகளை வெதுப்பகங்களுக்கு வழங்கும் சேவையில் சமூக நல அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது.
பாரிஸின் புறநகரான நுவாசி லூ செக்(Noisy-le-Sec – Seine-Saint-Denis) நகரசபை மேயர் தனது நிர்வாகப் பிரிவுக்குள் உள்ள வெதுப்பகங்களில் பரீட்சார்த்தமாக ஆரம்பித்த இத் திட்டத்தை பெண்களுக்காக சமூக வலைத்தளங்களில் இயங்கும்
l’association En avant toute(s)இயக்கம் நாடு முழுவதும் விஸ்தரித்துள்ளது.
விழிப்புணர்வுத் தகவல்கள் பொறிக்கப்பட்ட பேப்பர் உறைகள் லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு மகளிர் தினமாகிய நேற்று நாடெங்கும் வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன.
கணவன் – மனைவி இடையிலான வன்முறைகளின் அளவீடுகள், அது குறித்து முறையிடும் வழி முறைகள், தொடர்பு இலக்கங்கள் போன்ற பல தகவல்கள் பாண் உறைகளில் அச்சிடப்பட்டுள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.