கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக் காரணமாக வைத்துப் பெரும் இலாபம் சம்பாதித்ததாகும்.

34 வயதான அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிக்கலாஸ் லோபல் நகரத்துக்குத் தேவையான முகக்கவசங்களைக் கொள்வனவு செய்வதில் தனது நிறுவனம் மூலமாகத் தரகர் வேலை செய்து விற்பனை செய்த நிறுவனத்திடம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார். முதலில் மன்னிப்புக் கேட்டுகொண்ட அவர் அரசியலிலிருந்தே விலகிக்கொள்ளவேண்டுமென்ற குரல் எழுப்பப்பட்டதால் வேறு வழியின்றி விலகிக்கொண்டார்.

ஜியோர்க் நஸ்லீன் என்ற இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் அஞ்செலா மெர்க்கலின் கட்சியின் சக கட்சியைச் சேர்ந்தவர். கொரோனாத் தொற்றைத் தடுக்கப் பாவிக்கப்படும் முகக்கவசம் உட்பட்ட உபகரணங்களை வாங்குவதில் விற்பனையாளரிடம் இவரும் தரகராக இருந்து பெருந்தொகையைச் சம்பாதித்திருக்கிறார். இவர் மீது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *