ஒரே நாளில் 2,000 கொவிட் 19 இறப்புக்களைத் தாண்டியது பிரேசில்.
ஏற்கனவே பதினொரு மில்லியன் குடிமக்களை பிரேஸிலில் கொவிட் 19 தொற்றிவிட்டது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 268,370 ஆகியிருக்கிறது. ஒரே நாளின் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,972 ஆகியிருந்தது. அவ்வெண்ணிக்கையைத் தாண்டிய நாடு உலகில் அமெரிக்கா மட்டுமே.
பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோவின் அலட்சியமான “பிரேசில் மக்களை இதெல்லாம் பாதிக்காது,” என்ற ஆரம்ப காலக் கூற்றுக்களைப் பொய்யாக்கி நாட்டில் படுவேகமாகப் பரவிவருகிறது கொவிட் 19. இருபத்தைந்து நகரங்களில் மருத்துவமனைகளின் அவசரகாலப் பிரிவுகள் 80 % ஏற்கனவே கொவிட் 19 நோயாளிகளால் நிரம்பிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
“இந்தப் பெருவியாதிக்கெதிரான போரில் நாம் 2021 லேயே தோற்றுவிட்டோம். இதை இவ்வருடத்தின் முதலாவது பாதிக்குள் திருப்புவதென்பது நடக்காத காரியம். இன்று பிரேசில் ஒரு திறந்தவெளித் தொற்றுப் பரவல் மைதானமாகிவிட்டது. ஏதாவது ஒரு மந்திரமோ, மாயாஜாலத் தடுப்பு மருந்தாலேயோதான் இதை நெருங்கிய காலத்தில் நாம் பிரேசிலில் தடுத்து நிறுத்த முடியும். இப்போதைய நிலைமையில், பக்கத்து நாடுகளுக்கும், ஏன் உலகம் முழுவதற்குமே பிரேசில் ஒரு ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது,” என்று நிலைமையை விசனத்துடன் விபரிக்கிறார் நாட்டின் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு உயரதிகாரி யெஸெம் ஒரெல்லானா.
ஜனாதிபதி பொல்சனாரோவோ கொவிட் 19 பற்றிய தனது அலட்சியத்தைக் கைவிடவில்லை. “இதைப் பற்றிச் சிணுங்கிக்கொண்டிராதீர்கள்,” என்று மக்களிடம் கோபத்துடன் குறிப்பிடும் அவர் நாட்டு மக்கள் வீட்டுக்குள்ளிருப்பதையோ, பொதுமுடக்கங்கள் கொண்டுவரப்படுவதையோ விரும்பவில்லை.
சர்வதேச மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம் கப்ரியேஸுஸ் “பிரேசில் மிகவும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்செய்து நாட்டின் தொற்றுப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இல்லையேல், இது பக்கத்து நாடுகளுக்கும் வேகமாகப் பரவி அவர்களுடையை நிலையையும் சீர்குலைக்கும் அபாயம் மிகவும் அதிகம்,” என்கிறார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் சினோவக், அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகள் பிரேசில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவைகளை ஒழுங்குசெய்தலில் இருக்கும் ஒழுங்கீனம் காரணமாக மிகவும் மெதுவாகவே அது நடந்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. நாட்டின் சுமார் 4.1 விகித மக்களே இதுவரை ஒரு தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். அதில் மூன்றிலொரு பகுதியினர் இரண்டாவது மருந்தையும் பெற்றிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்