தேர்தலுக்காக மதுரையில் மறைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையால் புதிய சர்ச்சைகள்.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலுக்காக மதுரையில் கோவில் வீதியிலிருக்கும் மகாத்மா காந்தியின் சிலையைத் துணிகளால் மூடிவிட்டார்கள். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கும் தேர்தலுக்கான அடிப்படை முறைகளிலொன்றான “பொது இடங்களிலிருக்கும் தேர்தல் சின்னங்களை மறைக்க வேண்டும்,” என்பதற்காக இது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்காக என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மறைக்கப்பட்டுச் சர்ச்சைகளின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. கட்சிச் சின்னங்கள், கட்சிக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் தமிழகத்திலிருக்கும் சின்னங்கள் என்று பார்த்தால் அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார், முத்துராமலிங்கத் தேவர், இந்திரா காந்தி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அந்த நிலையில் தேர்தல் ஆணையம் சொல்வது போல சின்னம், கோட்பாடுகளின் அடையாளங்களிருந்து எவையெவை தேர்தல் காலத்தில் பார்ப்பவர்கள் மீது தாக்கங்களையுண்டாக்குமென்று ஆராயவேண்டும். அது முடிகிற காரியமா என்பது கேள்விக்குறி.
இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றம் 2011 இல் பெரியார் சிலையொன்றை மூடுவது பற்றிய தீர்ப்பளித்திருக்கிறது. அத்தீர்ப்பு உயிரோடு இருக்கும் தலைவர்களின் சிலைகளை மூடிவிடுதையே குறிப்பதாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் ஆந்திரப் பிரதேச அரசின் செயலாளரும் அதையே குறிப்பிட்டிருக்கிறார்.
2012 உத்தர் பிரதேச தேர்தலின்போது பகஜான் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சிலையையும், அவரது கட்சிச் சின்னமான யானைகளையும் மாநிலம் முழுவதும் மறைக்கவேண்டுமென்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மாயாவதி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தலைவராவார்.
எனவே மதுரையில் மகாத்மா காந்தியின் சிலை மூடிக் கட்டப்பட்டிருப்பது பற்றிய சர்ச்சை மேலும் வலுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்