முஸ்லீம் அல்லாதவர்களும் “அல்லாஹு” என்று கடவுளை உச்சரிக்கலாம் என்கிறது மலேசிய நீதிமன்றத் தீர்ப்பு.
2014 இல் மலேசியாவின் மாநில நீதிமன்றமொன்று கொடுத்த தீர்ப்பின்படி முஸ்லீம் அல்லாதவர்கள் “அல்லாஹு,” என்ற சொல்லையும் கடவுள் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சொற்களையும் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவை காபா, பைத்துல்லாஹ், சோலாத் ஆகியவையாகும், மலேசிய அரசினால் அது 1986 இல் முதலில் குறிப்பிடப்பட்டு அதைக் கிறீஸ்தவ தேவாலயங்கள் எதிர்த்து வழக்குப் போட்டிருந்தன.
மலேசிய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த கிறீஸ்தவ தேவாலயம் மலாய் மொழி பேசுகிறவர்கள் நீண்ட காலமாகவே “அல்லாஹு” என்ற சொல்லைக் கடவுளைக் குறிப்பிடுவதற்காகப் பாவித்து வருகிறார்கள். அதை முஸ்லீம்கள் மட்டுமே பாவிக்கலாமென்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தேவாலயம் சுட்டிக்காட்டியிருந்தது. மலேசிய அரசு தவிர்ந்த வேறெந்த நாட்டிலும் அல்லாஹு என்ற சொல்லை மற்றவர்கள் பாவிப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை.
வழக்கை விசாரித்த மலேசியாவின் மேல் நீதிமன்றம் “அல்லாஹு,” என்ற சொல்லை ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் பாவிக்கலாம் என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறது. சுமார் 32 மில்லியன் மக்களைக் கொண்ட மலேசியாவில் கிறீஸ்தவர்கள் சுமார் 10 % விகிதமாகும்.
பொதுவாகவே மலேசியத் தேவாலயங்களில் ஆங்கிலம், தமிழ் மற்றும் வெவ்வேறு சீன மொழிகளைப் பாவித்து வருகின்றனர். அவர்களுடைய மொழியில் கடவுளுக்கான சொற்கள் உண்டு. அங்குள்ள மலாய் பேசும் கிறீஸ்தவர்கள் மற்றும் போர்னியோவில் வாழும் சிறுபான்மை கிறீஸ்தவர்களுக்கு “அல்லாஹு” என்ற சொல்லே கடவுளைக் குறிக்கும் சொல்லாகும்.
மலேசியாவின் பழமைவாத முஸ்லீம் கட்சிகள் தாம் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விசனப்பட்டு இருப்பதாகவும் அரசு அந்தத் தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்திடம் போகவேண்டுமென்று குறிப்பிடுகின்றன. மலேசிய அரசு அதுபற்றிய முடிவை இன்னும் எடுக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்