அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக டெப்ரா ஹாலாந்தை செனட் சபை அங்கீகரித்திருக்கிறது.
அறுபது வயதான டெப்ரா ஹாலாந்து அமெரிக்காவின் அமைச்சர் பதவியேற்ற முதலாவது பழங்குடி இனப் பெண் என்று சரித்திரத்தில் பதிக்கப்படுகிறார். வழக்கறிஞரான இவர் 2018 இல் பிரதிநிதிகள் சபை என்ற பாராளுமன்றத்தின் மற்றச் சபை உறுப்பினராகத் தேர்தலில் வென்றபோதே அச்சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட பழங்குடியினரில் ஒருவர் என்று தன் பெயரைச் சரித்திரத்தில் பதிவுசெய்துகொண்டார்.
51 – 40 வாக்குகளைப் பெற்ற ஹாலாந்துக்கு ஆதரவாக ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வாக்களித்திருந்தார்கள். நியூ மெக்ஸிகோ தொகுதி உறுப்பினரான லகூனா புவேப்ளோ இனத்தைச் சேர்ந்தவர்.
லகூனா புவேப்ளோ சிகப்பிந்தியர்கள் அமெரிக்க அரசால் சிறுபான்மை இனமென்று அங்கீகரிக்கப்பட்டு நியூ மெக்ஸிகோவில் பிரத்தியேகக் குடியுருப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறார்கள். 1990 இல் அக்குடியிருப்பில் 3,600 பேர் வாழ்ந்தார்கள். அதே எண்ணிக்கையில் அவர்கள் அமெரிக்காவின் வேறு பாகங்களிலும் வாழ்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஹாலாந்தின் அமைச்சர் பதவிக்காகப் பழங்குடியினர் மட்டுமன்றி, சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும் பெருமளவில் குரல்கொடுத்திருந்தார்கள். இவர் அமெரிக்கா சுற்றுப்புற சூழலைப் பாதிக்கும் எரிபொருள்களை எடுப்பதை, பாவிப்பதை நிறுத்திவிட்டு இயற்கையைப் பாதிக்காத வளங்களைக் கையாள்வதில் முழுக் கவனமெடுக்கவேண்டுமென்று போராடி வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்