ஒரு பக்கம் தடுப்பு மருந்து ராஜதந்திரம், இன்னொரு பக்கம் அன்னாசிப்பழ ராஜதந்திரம்.
ஹொங்கொங்கைக் போலவே தாய்வானையும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகிறது சீனா. சீனக் கம்யூனிச அரசியல் திட்டங்களிலொன்றாக தாய்வானை நசுக்கித் தனது கைக்குள் கொண்டுவருவதும் சேர்க்கப்பட்டிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் சீனா தாய்வானின் பொருளாதாரத்தை நசுக்கச் செய்திருக்கும் ஒரு நடவடிக்கை அங்கிருந்து தாம் இறக்குமதி செய்துவந்த அன்னாசிப்பழங்களை வாங்காமல் நிறுத்திவிட்டதாகும்.
வருடத்துக்குச் சுமார் 420,000 தொன் அன்னாசிப்பழங்களை உற்பத்தி செய்யும் தாய்வான் அவற்றில் பெரும்பகுதியைத் தனது நாட்டிலேயே பாவிக்கிறது. சுமார் பத்து விகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் 95 % சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தாய்வானிலிருந்து வரும் அன்னாசிப்பழங்களில் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விவசாய உரத்தின் நச்சுப் பொருட்கள் இருப்பதால் அவற்றின் இறக்குமதியைத் தடை செய்வதாகக் கடந்த மாத இறுதியில் சீனா அறிவித்தது. அதன் உண்மையான காரணம் சீனா போட்டுவரும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தாய்வான் மறுத்து வருவதே. தனது வழிக்கு வராத நாடுகள் மீது இதுபோன்ற வர்த்தகத் தடைகள் போடுவது சீனாவின் தந்திரமாகும். அதைச் சீனா ஆஸ்ரேலியாவின் மாட்டிறைச்சி, தானியங்கள், திராட்சை ரசம் போன்றவற்றில் காட்டி வருவது தெரிந்ததே.
அன்னாசிப்பழங்களுக்காகச் சீனா தனது கதவுகளை மூடிக்கொள்ளவே தாய்வான் சுமார் ஒரு பில்லியன் டொலர்களைச் செலவிட்டுத் தனது அன்னாசிப்பழங்களுக்காக புதிய சந்தைகளைத் தேடியது. முக்கியமாக, சீனாவின் அடாவடித்தன அரசியல் பிடிக்காத நாடுகள் தாய்வானுக்குத் தோள் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
ஜப்பான் தான் பாவிக்கும் அன்னாசிப்பழங்களில் 15 % ஐ இறக்குமதி செய்கிறது. அது சுமார் 157,000 தொன்கள் ஆகும். அதில் 152,000 தொன்களை ஜப்பான் பிலிப்பைனிலிருந்து இறக்குமதி செய்கிறது. எனவே, ஜப்பானின் அன்னாசிப்பழ இறக்குமதியில் 20 % ஐக் கைப்பற்றினாலே சீனாவிற்கு விற்க முடியாததை விற்றுவிடலாம் என்று திட்டமிட்டது தாய்வான்.
ஜப்பான் மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் தாய்வானுக்கு அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சீனாவுக்கெதிராக ராஜதந்திரக் காய்களை நகர்த்த முன்வந்திருக்கின்றன. அவர்கள் தத்தம் நாடுகளில் தாய்வானின் அன்னாசிப்பழங்களை அவை வரும் இடங்களைப் பற்றி விபரித்துச் சந்தைப்படுத்த முன்வந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்