உலகின் படு மோசமான நச்சுக்காற்றைக் கொண்ட நகரமாக நியூ டெல்லி மூன்றாவது தடவையும் ………
சுவிஸிலிருக்கும் IQAir, அமைப்பின் கணக்குகளின்படி நியூ டெல்லி அடுத்தடுத்து, மூன்றாவது தடவையாக சுவாசிப்பதற்கு மோசமான காற்றைக் கொண்டிருக்கும் உலகின் முதலாவது உலகத் தலைநகராகியிருக்கிறது. PM2.5 என்றழைக்கப்படும் காற்றில் கலந்திருக்கும் நுரையீரலைத் தாக்கக்கூடிய நச்சுத்துளிகளின் அளவைக் கொண்டே அந்த அமைப்பு கணிப்புச் செய்கிறது.
உலகின் 106 நாடுகளின் நகரங்களில் IQAir காற்றைப் பரிசோதனை செய்து வருகிறது. 2020 இலும் நியூ டெல்லியே உலகில் சுவாசிப்பதற்கு நச்சுக்கலவையை அதிகமாகக் கொண்ட நகராக இருந்தது. அவர்களுடைய பரிசோதனையின்படி உலகின் மோசமான காற்றைக்கொண்ட 50 நகரங்களில் 35 இந்தியாவிலேயே இருக்கின்றன.
கொரோனாப் பரவல்களைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நகர முடக்கங்களின் காரணமாக PM2.5 நச்சுத் துளிகள் காற்றில் கலந்திருப்பது 11% ஆல் குறைந்திடுப்பினும் கூட உலகில் சுவாசிக்கும் காற்று அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவே மூன்றாவது இடத்திலிருக்கிறது. முதலிரண்டு நாடுகளும் முறையே பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவையாகும். பொதுவாகக் குறிப்பிட்டால் உலகில் நச்சுத் துளிகள் கலந்த காற்றைக் கொண்டிருக்கும் பிராந்தியம் தென்கிழக்கு ஆசியாவாகும்.
டெல்லியில் வருடாவருடம் இந்த நச்சுக்காற்றைச் சுவாசிப்பதால் 54,000 சிசுக்கள் மரணமடைகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்