சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19.
சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் நாலிலொரு பகுதி மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டபின்னரும் இத்தனை வேகமாகப் பெருவியாதி பரவுவதால் அரசு விசனப்படுகிறது.
19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிலேயில் தடுப்பு மருந்துகள் பெற்றுக்கொண்ட 5 மில்லியன் பேர் அதை பெரும்பாலானவர்கள் தடுப்பு மருந்துகள் பெற்றுக்கொண்ட உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் வைத்திருக்கிறது. ஆயினும், தலைநகரான சந்தியாகோவைச் சுற்றியிருக்கும் பெரும்பாலான நகரங்களில் கடுமையான பொது முடக்கம் நிலவுகிறது.
அலெக்ஸ் காலெர்கிஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் 2019 இன் கடைசிப் பகுதியில் சீனாவுக்கு ஒரு மருத்துவ மாநாட்டுக்காக விஜயம் செய்திருந்தார். அதனால் அங்கே பரவ ஆரம்பித்திருந்த ஒரு புதிய கிருமிபற்றி அவர் அறிந்துகொள்ள நேரிட்டது. அதன் பின் அக்கிருமியை அடையாளம் கண்டுகொண்டு 2020 ஜனவரி முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முயன்றுவந்த சினோவாக் நிறுவனத்துடன் காலெர்கிஸ் தொடர்பு கொண்டார். அதன் விளைவாக அத்தடுப்பு மருந்தின் முதலாவது கட்டத் தயாரிப்புக்கள் சிலேக்குக் கிடைத்தன. அதுவே,முழு அமெரிக்காவிலேயே அதிகமான மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் சிலே வெற்றிபெறக் காரணமாகும்.
2019 இல் சிலேயின் மக்கள் திரண்டெழுந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களில் மாறுதல்கள் வேண்டுமென்று போராடினார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அம்மாறுதல்களைச் செய்யவேண்டிய பாராளுமன்றச் சபைக்கான அங்கத்துவர்களைத் தெரிந்தெடுப்பதற்கான தேர்தல்கள் ஏப்ரலின் நடுப்பகுதியில் நடக்கவிருக்கின்றன.
தொற்றுக்களின் வேகம் மோசமாக இருக்கும் தற்போதைய நேரத்தில் அத்தேர்தல்களை நடத்துவது ஆபத்தானது என்று சிலேயின் மருத்துவ சேவையின் உயர்மட்டத்தினர் குரல்கொடுக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்