நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர்.
PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம் துருக்கிய இராணுவத்தினரைத் தாக்கி வருவதாகப் பல தடவைகள் ஜனாதிபதி எர்டகான் குற்றஞ்சாட்டியிருக்கிறார். சமீபத்தில் அக்காரணத்துக்காக அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.
மக்கள் ஜனநாயகக் கட்சி [HDP] என்ற அந்தக் கட்சி பொதுவாக துருக்கியில் வாழும் குர்தீஷ் மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால், தங்களுக்கு PKK என்ற பெயரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குர்தீஷ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புகளேதுமில்லை என்று குறிப்பிட்டு வருகிறது.
தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட PKK இயக்கத்துடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சி துருக்கியின் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் அது துருக்கிய அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு துருக்கிய அரச வழக்கறிஞர் அரசியல் சட்ட நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்.
அரச வழக்கறிஞர் அக்கட்சியைக் கலைத்துவிடவேண்டுமென்று கோருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகவலைத்தளங்களில் தீவிரவாதத்தைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். தாம் எர்டகானின் அரசியல் நடப்புக்களை எதிர்த்துக் கேள்வி கேட்பதாலேயே தங்களை அவர் பழிவாங்கத் திட்டமிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்