“ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமலிருப்பது நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்துக்கெதிரானது,” ஜப்பானிய நீதிமன்றம்.
“என்ன பாலாருடன் ஒருவர் வேட்கை கொள்கிறாரென்பது, ஒருவர் தான் எந்த இனம், நிறமுள்ளவராகப் பிறக்கிறான் என்பதைப் போலவே நிர்ணயிக்க முடியாதது. எனவே ஓரினச் சேர்க்கையாளர்களைத் தம்பதிகளாக வாழ அனுமதிக்காமலிருப்பது அவர்களுடைய உரிமைகளை மீறுவதாகும்,” என்று ஜப்பானின் சொப்பாரோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சமூக அமைப்புக்களைப் பற்றிப் பெரும்பாலும் பழமைவாத நிலைப்பாடுகளைக் கொண்ட ஜப்பானின் ஆளும் லிபரல் டெமொகிரடிக் கட்சி நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தொடர்ந்தும் அனுமதிக்க மறுத்து வருகிறது. உலகின் ஏழு பணக்கார நாடுகளின் அமைப்பான G7 அமைப்பில் தொடர்ந்தும் ஓரினச் சேர்க்கையாளர்களின் சமூக உரிமைகளை மறுத்துவரும் ஒரே நாடாக இருக்கிறது ஜப்பான்.
LGBTQ குழுவினரின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஜப்பானில் வேகமாகப் பரவியிருப்பினும் சட்டத்தின் கண்ணில் அவர்களுடைய உரிமைகள் படுவதில்லை. ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒருவர் இறந்தால் மற்றவர் அவருடைய சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. பிள்ளைகளுடனான உரிமைகளும் ஓரினச்சேர்க்கையாளருக்குக் கிடையாது. வாடகைக்கு வீடுகள் கிடைப்பதும் அரிது. ஆங்காங்கே நகர சபைகள் அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது அரசாங்கம் அதே போன்ற முடிவை எடுக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. இதே போன்ற மேலும் நாலு வழக்குகள் வெவ்வேறு நகரங்களில் நீதிமன்றங்களில் காத்துக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பல நடவடிக்கைகளும் சேர்ந்து ஜப்பானிய அரசை மெதுவாக மாற்றலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்