அத்லாந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் ஆசியர்கள் மீது காட்டப்படும் இனத்துவேசத்தின் அடையாளமா?
16 ம் திகதி செவ்வாயன்று அமெரிக்காவின் அத்லாந்தா மாநிலத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் எட்டுப் பேர் ஒரேயொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் ஆசியாவைப் பின்னணியாகக் கொண்ட பெண்கள். கொலை செய்த 21 வயதுக்காரன் தனது கொலைகளுக்கு இனவெறி காரணமல்ல என்று கூறியிருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஆசியர்களிடையே இது பீதியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கொவிட் 19 ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆசியர்கள் மீதான வெறுப்பும், இனவெறியும் அமெரிக்காவில் அதிகரித்திருப்பது கவனிக்கப்பட்டு வருகிறது. அவைகளால் பயந்தும், கோபமுமடைந்திருந்த ஆசியர்களிடையே இக்கொலைகளின் பாதிப்பு எப்படியான விளைவுகளை ஏற்படுத்துமென்ற சிந்தனை எழுந்திருக்கிறது.
அமெரிக்கா முழுவதுமிருக்கும் ஆசியச் சிறுபான்மையினர் சமூக வலைத்தளத்தில் இறந்தவர்களுடைய உற்றார், உறவினருக்குத் தமது ஆதரவைக் காட்டினார்கள். ஆங்காங்கே இன, நிறவெறிக்கெதிரான ஊர்வலங்களும் நடாத்தப்பட்டன. ஒரு சாரார் ஆசியர்களின் அமைப்புக்கள், நிறுவனங்களுக்குத் தங்களது ஆதரவையும் தெரிவித்தார்கள்.
இன, நிற வெறிகளைப் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்ந்ததில், சமீபத்தில் அப்படியான காரணங்களைக் கொண்ட குற்றங்கள் பொதுவாக அமெரிக்காவில் குறைந்திருக்கின்றன. அதே சமயம் ஆசியச் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும் குற்றங்களோ 150 % விகிதத்தால் அதிகரித்திருக்கின்றன. அந்த அதிகரிப்பு கடந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குப் பிறகே ஏற்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக இருப்பது கொரோனாக் கிருமிகளின் பரவல் ஆசியாவில், சீனாவிலிருந்து தான் வந்திருக்கிறது என்ற நம்பிக்கை பரவியிருப்பதாகும். இதனால், அத்தொற்று வியாதியையும் சீனாவையும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்து வந்த டொனால்ட் டிரம்ப் மீதும் மீண்டும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
கொலைகளைச் செய்த 21 வயது வெள்ளையன் தனது நடத்தைக்குக் காரணம் தனது பாலியல் வேட்கை ஈர்ப்பு என்று குறிப்பிட்டிருக்கிறான். கொலைகள் நடந்த உடல் பிடித்துவிடும் இடங்கள் இருக்கக்கூடாதென்று தான் விரும்புவதாகவும், ஆனாலும் தனது பாலுணர்வு வேட்கையால் அவை தன்னை ஈர்ப்பதைத் தடுக்க முடியவில்லையென்றும் அவன் குறிப்பிட்டிருக்கிறான்.
சாள்ஸ் ஜெ. போமன்