உறைந்து கிடக்கும் அலாஸ்காவில், ஆரம்பத்திலிருந்தே சூடு பிடித்த அமெரிக்க – சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள்.
அலாஸ்காவில் ஆரம்பித்தது ஜோ பைடனின் அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையேயான முதலாவது பேச்சுவார்த்தை. டிரம்ப்பின் காலத்திலிருந்தே உறைந்துபோயிருக்கும் இரு தரப்புக்குமிடையேயான ராஜதந்திர வர்த்தக உறவுகளினால் பகிரங்க அரங்கிலேயே வெடித்துச் சிதறியது கடுமையான வார்த்தைகளிலான எரிமலைக்குழம்பு.
‘அமெரிக்காவின் மீதான தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்திலான தாக்குதல்கள் தவிர ஷின்யினாங், ஹொங்கொங், தாய்வான் ஆகிய விடயங்களில் சீனாவின் அரசியல் நடத்தை, வெவ்வேறு நாடுகள் மீதான சீனாவின் வர்த்தக முடக்கல்கள்’ போன்றவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி, அவைகளினால் சர்வதேசத்தின் ஸ்திரம் தளம்புகிறது என்று குற்றஞ்சாட்டித் தனது பேச்சை ஆரம்பித்தார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன்.
பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த கம்யூனிஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர் யங் யியேச்சி உடனடியாக ஒரு நீண்ட விளக்கத்தை முன்வைத்து பிளிங்கனின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் கொடுக்கத் தயங்கவில்லை. அமெரிக்கா தன்னை நல்லவராகச் சித்தரித்துக்கொண்டு மற்றவர்களுக்கு மனித உரிமைகள் பற்றிப் பாடம் நடத்த முயலும்போது அவர்களுடைய நாட்டுக்குள்ளேயே பல குற்றங்கள் நடக்கிறது என்றும் அமெரிக்க, மேற்கு நாடுகளின் “சர்வதேசம் எப்படி இயங்கவேண்டும்,” என்ற கோட்பாடுகள் உலகமெங்கும் திணிக்கப்பட முடியாது என்றும் கூறினார் யங் யியேச்சி.
“சீனாவை மூச்சுத்திணறச் செய்ய உங்களால் முடியாது,” என்றார் அவர்.
இரண்டு நாடுகளுக்குமிடையே தொடர்ந்து நிலவிவரும் மனக்கசப்பான கருத்துப் பரிமாறல்களும், சமீபத்தைய நடப்புகளும் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பமும் சேர்ந்து இந்த நாள் முழுக்கத் தொடரப்போகும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பெரிதாக எந்த மாற்றங்களும் அவர்களிடையே உண்டாகாது என்றே காட்டுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்