பிரான்ஸில் அஸ்ராஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி சுகாதார அதிகார சபை திடீர் முடிவு.
பிரான்ஸில் சுகாதார விடயங்களில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகார சபை(Haute autorité de santé) இன்று வெளியிட்டிருக்கின்ற சிபாரிசு ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி 55வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக முன்னெடுக்குமாறு அரசைக் கேட்டிருக்கும் சுகாதார அதிகாரசபை அஸ்ராஸெனகா தடுப்பூசிக்கு வயது வரம்பை அறிவித்துள்ளது.
ஜரோப்பாவில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றியோரில் இரத்தம் உறைதல் மற்றும் முளையில் இரத்தக் கட்டி போன்ற கடுமையான விளைவுகளைச் சந்தித் தவர்கள் அனைவருமே 55வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதனை அடுத்தே இவ்வாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரத்தக் கட்டிகள் உட்பட கடுமையான பக்க விளைவுகளை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இடைநிறுத்தப்பட்ட
அஸ்ராஸெனகா தடுப்பூசிப் பயன்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் இன்று(வெள்ளி) மாலை தொடக்கம் தடுப்பூசி ஏற்றும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
அஸ்ராஸெனகா தடுப்பூசி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீள ஏற்படுத்துவ தற்காக நாட்டின் பிரதமர் இன்று தனக்கு தடுப்பூசி ஏற்றிக் கொண்டார். அவர் அதனை ஏற்றிக்கொள்வதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாகவே சுகாதார அதிகார சபை தனது இந்த முடிவை வெளியிட்டது.
பிரான்ஸில் இதுவரை 55வயதுக்கு குறைந்தவர்களுக்கும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றப்பட்டுவந்தது குறிப்பிடத் தக்கது.
தடுப்பூசி “பாதுகாப்பானது செயல்திறன் மிக்கது” என்று ஜரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் மீண்டும் உத்தரவாதம் வழங்கியுள்ள போதிலும் நாட்டின் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் அஸ்ராஸெனகா தடுப்பூசி குறித்து அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
(படம் :55 வயதான பிரதமர் Jean Castex இராணுவ மருத்துவமனை ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட காட்சி)
குமாரதாஸன். பாரிஸ்.