கரடுமுரடான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாலும் அமெரிக்க – சீனப் பேச்சுவார்த்தைகள் தமக்கான வழியைக் கண்டுகொண்டிருக்கின்றன.
வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் அலாஸ்காவில் நடந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் எதிர்பார்த்தபடியே உலகுக்கு வார்த்தை வாணவெடிகளைக் காட்டியது. ஆனால், முடிந்துவிட்ட அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பாரும் தாம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“நடந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி, அவை மிகவும் நேரடியான, கடுமையான, ஆனால், நிஜமான விளைவுகளை நோக்கும் கருத்துப் பரிமாறல்களாகவே இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அதேபோலவே இரண்டு தரப்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ஈரான், ஆப்கானிஸ்தான், வட கொரியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களுடன் காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நடவடிக்கைகளும் எங்களிடையே முக்கியமானவையாக எடுக்கப்பட்டன,” என்று அமெரிக்கத் தரப்பில் பேச்சுவார்த்தைகளிலீடுபட்ட வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு நிர்வாகி சலிவன் ஆகியோரால் குறிப்பிடப்படுகிறது.
சீனத் தரப்பில் முக்கியத்துவராக இருட்ந்த யங் யியேச்சி, “நாம் முக்கியமாகச் சில விடயங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். சில விடயங்களில் ஒத்த கருத்துக்களும், பல விடயங்களில் பெரும் இடைவெளியும் எங்களிடையே இருந்தது. ஆனாலும், இது ஒரு நல்ல ஆரம்பம்,” என்று சீன ஊடகங்களில் பேச்சுவார்த்தைகள் பற்றிய தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்