தனது 61 வது வயதில் தன்சானியாவின் ஜனாதிபதியாகும் ஷமியா சுலுகு ஹசன் நாட்டின் முதலாவது பெண் தலைவியாகிறார்.

“கொரோனாத் தொற்றுக்களெல்லாம் வெள்ளையர்களின் புரளி” என்று சாடி, அதற்காக நாட்டில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்து, தடுப்பு மருந்துகளையும் வேண்டாமென்று தடுத்து உலகெங்கும் தன்சானியாவின் பக்கம் கவனத்தைச் செலுத்தவைத்த ஜனாதிபதி ஜோன் மங்குபுலி இறந்துவிட்டதாக 17ம் திகதி புதனன்று உப ஜனாதிபதியாக இருந்த ஷமீயா அறிவித்திருந்தார். அதையடுத்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படியே அவர் வெள்ளியன்று தன்சானியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 

https://vetrinadai.com/news/covid-denial/

கென்யாவில் நைரோபியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோன் மங்குபுலி “இருதயம், சுவாசப் பிரச்சினைகளால்” கடந்த வாரமே இறந்துவிட்டதாக நாட்டின் தினசரி குறிப்பிடுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களும், வேறு ஊடகங்களும் மங்குபுலி இறந்ததன் காரணம் கொவிட் 19 தொற்று என்று குறிப்பிட்டிருந்தன. 

மங்குபுலியின் ஆட்சிக்காலம் 2025 வரையாகும். அந்தக் காலம் முடியும்வரை ஜனாதிபதியாக ஷமீயா ஹசனே நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார். தான் எடுத்த முடிவுகளில் இம்மியும் அசையாமலிருந்த மங்குபுலியை “புல்டோஸர்” என்று குறிப்பிட்டு ஷமியா ஒரு மென்மையான அரசியல்வாதி என்கிறார்கள். லஞ்ச ஊழல்களில் ஈடுபடாத சுத்தமான அரசியல்வாதியாகவும் மங்குபுலி உலகுக்கு அறிமுகமானவராக இருந்தார். ஷமியா எப்போதும் தனது ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு உடன்படுபவராக இருந்தாலும், உலக நாடுகளில் பரவலாக அறியப்படாதவராகும். 

தன்சானியாவின் 57 வருடச் சரித்திரத்தின் முதலாவது ஜனாதிபதியாகும் ஷமீயா ஹசன் நாட்டின் முக்கிய நகரமும், தலை நகரமுமான டார் அல் சலாமிலிருக்கும் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றார். ஒரு கையில் குரானுடன் சிகப்பு ஹிஜாப் அணிந்து பதவியேற்ற ஷமீயாவோ அவரைச் சுற்றியிருந்தவர்களோ எவ்வித கொரோனாக் கட்டுப்பாடுகளையும் அனுசரித்ததாகத் தெரியவில்லை என்கிறது ஊடகங்கள். 

தன்சானியாவின் சுயாட்சிப் பிரதேசமான சன்ஸிபாரில் பிறந்து வளர்ந்த ஷமீமா தன்னை ஒரு முஸ்லீம் என்று பிரகடனப்படுத்தி வருபவராகும். பெரும்பாலும் பெண்கள் கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்படாத பிராந்தியத்தில் வளர்ந்த இவரை பலவீனமான ஒருவராக எடைபோடலாகாது என்று பல அரசியல் வல்லுனர்களும் குறிப்பிடுகிறார்கள்.

2000ம் ஆண்டில் நாட்டின் நியமிக்கப்படும் பிரதிநிதியாக அரசியலுக்கு வந்து அமைச்சரான ஷமீயாவைத் தவிர அச்சமயத்தில் உயர்மட்டத்தில் பெண்களே இருக்கவில்லை. 2010ம் ஆண்டுவரை அப்பதவியிலிருந்த ஷமீயா 2010 இல் தேர்தலில் 80 % வாக்குகளைப் பெற்றுப் பிரதிநிதியானார். 2015 இல் நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உண்டாக்கும் பணியிலும் ஈடுபட்டார். 

1992 வரை நாட்டின் ஒற்றைக் கட்சி ஆட்சியை நடத்திவந்த The Chama Cha Mapinduzi கட்சி மற்றையக் கட்சிகளை அனுமதித்தது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் அக்கட்சியே வெற்றிபெற்று அரசமைத்து வந்திருக்கிறது. அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரிருக்க மாஜி ஜனாதிபதி ஜோன் மங்குபுலி தனது உதவி ஜனாதிபதியாக ஷமீமாவை அப்பதவிக்குத் தேர்ந்தெடுத்தபோதே அது பலரின் கவனத்தையும் கவர்ந்தது. 

“பிரிவினைகளை மறந்து நாம் ஒன்றுபடுவோம். ஜனாதிபதியின் வேதனையான இறப்பைத் தாண்டி நாம் நாட்டை முன்னேற்றுவோம்,” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் ஷமீமா. அவர் முன்னாலிருக்கும் முக்கிய விடயம் கட்சியைத் தன் பின்னால் நிற்கவைப்பதுதான் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *