தன்னிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் மீது உளவு பார்த்ததாக சுவீடிஷ் ஐக்கியா நிறுவனம் பிரான்ஸ் நீதிமன்றத்தில்.
30 நாடுகளில் சுமார் 400 அங்காடிகளைக் கொண்டிருக்கும் ஐக்கியா நிறுவனம் உலகின் மிகப்பெரும் பல்பொருள் அங்காடி என்ற புகழ் பெற்றது. 1943 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கியா நெருக்கமான இடங்களில் பொருத்தக்கூடியதான தளபாடங்கள், சமையலறைகளைத் துண்டுகளாக விற்பதால் பிரபலமானது. அதன் பிரான்ஸ் கிளையானது தனது தொழிலாளர்களின் மீது திட்டமிட்டு உளவு பார்த்ததாக அதன் முக்கிய நிர்வாகிகளாக இருந்த 15 பேர் மீது வழக்கு ஆரம்பித்திருக்கிறது.
2012 இல் பிரெஞ்ச் பத்திரிகையாளர்களால் உளவு பார்த்த விபரங்கள் தோண்டப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விபரங்கள் பிரெஞ்ச் தொழிலாளர் சங்கமொன்றால் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டன. அது பற்றி நீதிபதி ஆராய உத்தரவிட்டிருந்தார்.
அச்சமயத்து ஐக்கியா பிரான்ஸ் நிர்வாகத் தலைவர் ஸ்டீபன் வனோவர்பேக்கெ அவருக்கு முன்னால் அப்பதவியிலிருந்தவர்கள் உட்படப் பதினைந்து பேர் அந்த உளவு வலையின் சிலந்திகளாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் இதை 2009 முதலே நடாத்தி வண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஐக்கியா தொழிலாளர்கள், அங்கே வேலை தேடியவர்கள் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஐக்கியாவின் இன்னொரு உயர் நிர்வாகியான ஷோன் பிரான்ஸுவா தனியார் துப்பறிவாளர்களுக்கு வருடாவருடம் சுமார் 600,000 எவ்ரோக்கள் செலவு செய்திருக்கிறார். அவ்விடயத்தில் 4 பொலீசாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வெளியிட அனுமதியற்ற தனியார் விபரங்களை அவர்கள் ஐக்கியா நிர்வாகிக்கு விற்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தலா 10 வருடங்கள் சிறைத் தண்டனை பெறக்கூடும்.
ஐக்கியா நிறுவனம் தாம் திட்டமிட்டு உளவு பார்த்த குற்றத்தை மறுக்கிறது. ஆனாலும், நிர்வாக அமைப்பிலிருந்த பலவீனங்களால் இப்படியான தவறுகள் நடந்திருப்பதாகவும், அதனால் தமது நிறுவனக் கௌரவம் ஏற்கனவே அவமானமடைந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
பிரான்சில் மட்டும் சுமார் 10,000 பேரைத் தன்னிடம் வேலைக்கு வைத்திருக்கும் ஐக்கியா நிறுவனம் இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டால் சுமார் 3.75 மில்லியன் எவ்ரோக்கள் வரை தண்டமாகச் செலுத்தவேண்டியிருக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்