மில்லியன் டொலர்களுக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்ட இந்தியர்கள் 4.12 லட்சம் பேராகியிருக்கிறார்கள்.
இந்தியர்களின் சொத்து நிலபரம் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் [Hurun India Wealth Report 2020] அறிக்கையின்படி இந்தியர்களிடையே மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சொத்தைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும், வருடத்தில் சராசரியாக 20 லட்சம் ரூபாய்களைச் சேமிக்கும் ஒரு புதிய மத்திய தரம் உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவிலிருக்கும் மத்திய வர்க்கத்தினரின் எண்ணிக்கை சுமார் 56,400,000 ஆகவும் புதிய மத்திய வர்க்கத்தினரின் எண்ணிக்கை 633,000 ஆகவும் இருக்கிறது. இந்தியாவின் சாதாரண மத்திய வர்க்கத்தினர் வருடாவருடம் 2.5 லட்சம் ரூபாய்களைச் சம்பாதிக்கிறார்கள்.
மில்லியன் டொலர் பணக்காரர்களை மிக அதிகமாகக் கொண்ட நகரங்கள் முறையே மும்பாய், டெல்லி, கோல்கத்தா, பங்களூரு, சென்னை ஆகும். மும்பாய் 16,933 மில்லியன் டொலர் பணக்காரர்களையும் சென்னை 4,685 ஐயும் கொண்டிருக்கிறது. மாநிலங்களில் முறையே மஹாராஷ்டிரா, உத்தர் பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகியவை அப்பணக்காரர்களில் 46 % ஐக் கொண்டிருக்கின்றன. .
மத்திய தரத்தினருக்குக் கீழுள்ளவர்களைப் பற்றி அந்த அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை. குறைந்த அடிப்படை வருமானங்களைக் கொண்டவர்களைப் பொறுத்தவரை இந்தியா, தொடர்ந்தும் பல வறிய நாடுகளைப் போலவே இருப்பது மாறவேண்டும் என்று குறிப்பிடும் அவ்வறிக்கை நாட்டுக் குடிமகனின் வருடாந்தர சராசரி வருமானமாக இருக்கும் 1,876 டொலர்கள் 3,000 டொலர்களாக உயரவேண்டும் என்று சிபாரிசு செய்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்