இரண்டே வருடங்களில் நாலாவது தேர்தல் நடக்கிறது இஸ்ராயேலில்.
நீண்டகாலம் இஸ்ராயேலின் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நத்தான்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்க 50 – 60 விகிதமானவர்கள் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எதிரணியை ஒன்றுபடுத்தும் கட்சியோ, தலைமையோ இல்லாத நிலையில் 2019 லிருந்து நாலாவது பொதுத் தேர்தலுக்குப் போகிறார்கள் இஸ்ராயேல் மக்கள்.
இஸ்ராயேலின் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல. பாலஸ்தீனர்களுடனான பிரச்சினைகள் சில. ஆனால், அப்பிரச்சினைகளைப் பேசுமளவுக்குப் போகக்கூட அரசியலில் எதிர்க்கட்சியெதுவும் இல்லை. நாட்டின் அரசியல் பலவீனமாக இருப்பது மக்கள் ஆளும்கட்சிக்கு மாற்றாக வேறொரு அரசியலைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் கூட அதற்கான ஒரு தலைமை இல்லை. அதன் விளைவாக ஒன்றன்பின்னொன்றாகத் தேர்தல்கள் நடந்து வருகின்றன. நாலாவது தேர்தலுக்குப் போகுமுன்னேயே இவ்வருடக் கடைசிக்கு முன்னர் ஐந்தாவது தேர்தலும் வருமென்று கட்டியம் கூறுகிறார்கள் பலர்.
தனது அரசியலால் மட்டுமன்றி, லஞ்ச ஊழல்களுக்காகவும் ஒரு சாராரின் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் நத்தான்யாஹு. அவருக்கெதிராக பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் வழக்கு நடக்கிறது. அதேசமயம், உலகின் முதலாவது நாடாக கொரோனாத் தொற்றை ஒழிக்க நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய அவரின் சாதனை மீண்டும் அவர் வெல்ல வாய்ப்பளிக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.
மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அவரது நெருக்கத்தை வைத்துக்கொண்டு அவர் சர்வதேச அரசியலில் காய்களை நகர்த்திய யுக்திகளாலும் அவருக்கு ஓரளவு ஆதரவு பெருகியிறுக்கிறது. அதேசமயம், ஜோ பைடனின் அரசின் ஆதரவு அவருக்குக் கிடைக்காதென்பதால் அது இஸ்ராயேலின் வெளிநாட்டுக் கொள்கையில் என்ன பலவீனங்களை உண்டாக்குமென்றும் மக்கள் யோசிக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்னரான கணிப்புக்களில் 51 % நத்தான்யாஹுவை மாற்ற விரும்புகிறார்கள். அவரது லிகுட் கட்சி சுமார் 30 % வாக்குகளை அறுவடை செய்யலாம். வலது சாரிகளுடனும், பழமைவாத யூதக் கட்சிகளுடனும் சேர்ந்து நத்தான்யாஹுவால் 50 % க்கும் அதிகமான ஆதவைப் பெற்று மீண்டும் அரசமைக்க முடியும் என்று கருதப்படுகிறது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவுக் கட்சிகளோ அரசாங்கம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நத்தான்யாஹுவின் பலவீனமறிந்தவர்கள். கடுமையான கோரிக்கைகளை முன்வைக்கத் தயங்காதவர்கள்.
கடந்த தேர்தலுக்குப் பின்னர் சேர்ந்து ஆட்சியமைத்த எதிரணித் தலைவர் பென்னி காண்ட்ஸ் அதிகமாக மக்களைக் கவராதவர். அவரது ஆதரவுக்கட்சிகளும் இலகுவில் ஒரேவித அரசியலில் ஒன்றுபடுத்த மிகவும் கடினமானவர்கள்.
இன்று நடக்கப்போகும் இஸ்ராயேல் தேர்தலில் மக்கள் எப்படி வாக்களித்தாலும் கூட தேர்தலுக்குப் பின்னர் அரசியல்வாதிகளின் கூட்டுகள் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே அரசாங்கத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்